ஈரோடு: ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் தொடர்புடைய 3 பேரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜான். இவர் பிரபல ரவுடிகள் இருவரை கொலை செய்த வழக்கு, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இவர்மீது நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இன்றைய தினம் திருப்பூரில் தங்கி இருந்த இவர் அன்னதானப்பட்டி காவல்நிலையத்தில் கையெழுத்து போடுவதற்காக தனது மனைவி சரண்யாவுடன் காவல்நிலையத்திற்கு வந்து கையெழுத்து போட்டு தனது காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது ஈரோடு மாவட்டம் நசியனூர் பக்கத்தில் சென்று கொண்டிருக்கும் போது அவருடைய காரின் பின்புறம் மற்றொரு கார் மோதியது.
இதனால் ஆத்திரமடைந்த ஜான் விபத்து ஏற்படுத்தியவர்களை கேள்வி கேட்பதற்காக சற்று திரும்பிய போது அந்த காரிலிருந்து இறங்கிய 5 நபர்கள் ஜான் மற்றும் அவரது மனைவி சரண்யா இருவரையும் சரமாரியாக வெட்டினர். இதில் ஜான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மனைவி தற்போது படுகாயமடைந்து நசியனூரில் செயல்பட்டுவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜான் உயிரிழந்த நிலையில் அவரது உடலை பெருந்துறையில் இருக்கக்கூடிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் விபத்து ஏற்படுத்தி கொலை செய்த அந்த கும்பலை சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் சுட்டு பிடித்த நிலையில் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இச்சம்பவமானது கொலைக்கு பழிக்கு பழியாக நடந்திருக்கும் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அது தவிர சம்பவ இடத்தில் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார்.
The post நசியனூர் அருகே பிரபல ரவுடி கொலை: 3 பேரை சுட்டுப் பிடித்த போலீசார் appeared first on Dinakaran.