டி.ஆர்.பாலா இயக்கத்தில் முகேன் ராவ் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘ஜின் -தி பெட்’. இதில் பவ்யா தரிகா, ராதாரவி, பால சரவணன், இமான் அண்ணாச்சி, நந்து ஆனந்த், வடிவுக்கரசி, ‘நிழல்கள்' ரவி, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அர்ஜுன் ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு விவேக்- மெர்வின் இசையமைத்துள்ளனர். காமெடி ஹாரர் படமான இது, வரும் 30-ம் தேதி வெளியாகிறது. இதன் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
நீதியரசர் எஸ்.கே. கிருஷ்ணன், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி பன்னீர் செல்வம் ஐபிஎஸ், தயாரிப்பாளர் கேயார், பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி.உதயகுமார், பேரரசு என பலர் கலந்துகொண்டனர். ஆர்.கே. செல்வமணிபேசும்போது, “வளர்ந்த நட்சத்திரங்களுக்கு ஒரு வேண்டுகோளைவைக்கிறேன். இயக்குநரிடமும், எழுத்தாளர்களிடமும் நீங்களே நேரடியாகக் கதையைக் கேளுங்கள். மேலாளர்களும், உதவியாளர்களும் கதை கேட்கத்தொடங்கியதால்தான் சினிமா சீரழிகிறது. இதனால் திரைத்துறையில் ஆரோக்கியமான நட்பு ஏற்படுவதில்லை. எப்போது ஒரு நாயகனுக்கும் நாயகிக்கும் இயக்குநருக்கும் இடையே புரிதலும், நட்பும் இல்லையோ, அப்போதே அந்தப் படம் தோல்வியைத் தழுவுகிறது. இதை என் படத்தை ஆய்வு செய்து தெரிந்துகொண்டிருக்கிறேன்.