ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இது மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 386 விசைப்படகுகள் மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்குச் சென்றன. பாக் ஜலசந்தி கடலில் நேற்று முன்தினம் இரவு மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது ஐந்துக்கும் மேற்பட்ட ரோந்து படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் அங்கிருந்து விரட்டியடித்தனர்.
தொடர்ந்து மீனவர்களை விரட்டிய இலங்கை கடற்படையினர், தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி ஆரோனுக்கு சொந்தமான படகில் சென்ற மீனவர்கள் இருதயம் (59), ஆரோக்கியதாஸ் (49), அந்தோணியார் அடிமை (64), ரோகன்லியன் (54), ராமச்சந்திரன் (40), முனியாண்டி (59), ஜெகநாதன் (60), ராமன் (52) ஆகிய 8 மீனவர்களும், ராமேஸ்வரம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்த பூண்டிராஜ் (38) படகில் அவரும், அமல்ராஜ் (27), யாக்கோபு (35), கிருபாகரன் (56), இவரது மகன் அருள் தினகரன் (24), மாதவன் (22), அந்தோணி ஈசாக் (19), டேவிட் (50), கார்த்திகேயன் (27) ஆகிய 9 மீனவர்கள் என மொத்தம் 17 பேரை கைது செய்த இலங்கை கடற்படை, படகுகளுடன் அவர்களை மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றனர்.
வானிலை எச்சரிக்கை காரணமாக கடந்த 2 மாதங்களில் 10 நாட்களே மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கடந்த 5ம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 2 விசைப்படகையும், 14 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்த சம்பவம் மீனவ மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கிறிஸ்துமஸ் தினம் இன்று கொண்டாடப்பட உள்ள நிலையில் நடந்த கைது சம்பவம், ராமேஸ்வரம் பகுதி மீனவக்குடும்பங்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.
பாக் ஜலசந்தி கடலில் இலங்கை கடற்படையின் அத்துமீறிய ரோந்து மற்றும் சிறைபிடிப்பு நடவடிக்கையால் அச்சமடைந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் மிகக்குறைவான மீன்பாடுகளுடன் நேற்று அதிகாலை கரைக்கு திரும்பினர். கரை திரும்பிய சிறிய விசைப்படகுகளுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டது. பெரிய படகுகளில் ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
இன்று வேலைநிறுத்தம்: இலங்கை கடற்படையின் அத்துமீறிய சிறைபிடிப்பை கண்டித்தும், கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், பறிமுதல் படகுகளையும் ஒன்றிய அரசு மீட்டுத்தர வலியுறுத்தியும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (டிச. 25, புதன் கிழமை) ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
துப்பாக்கி முனையில் கைது
கைதான மீனவர் அருள்தினகரன், தாய் தமிழரசியிடம் செல்போனில் பேசும்போது, ‘‘இரவு 11.30 மணியளவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்த எங்களை இலங்கை கடற்படை விரட்டி வந்து துப்பாக்கி முனையில் கைது செய்தது. இலங்கை கடற்படையினரிடம் எவ்வளவோ கெஞ்சி அழுதும் விடவில்லை. கைது செய்த எங்களை கோர்ட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். நாங்க எப்போ வருவோம்னு தெரியலயம்மா’’ என அழுதுள்ளார்.
The post நடுக்கடலில் 2 விசைப்படகுகளுடன் ராமேஸ்வரம் மீனவர்கள் 17 பேர் கைது: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் appeared first on Dinakaran.