புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காமில் நடந்த தாக்குதல் குறித்து நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷொபஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார்.
அபோதாபாத்தில் உள்ள ராணுவ அகாடமியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர், "சமீபத்தில் பஹல்காமில் நடந்த துயரச் சம்பவம், பழி சுமத்தும் விளையாட்டுக்கான மற்றொரு உதாரணமாகும். இது ஒரு முடிவுக்கு வரவேணடும். எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான, நம்பகமான விசாரணைகளிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. அதேநேரத்தில் கடந்த 2019-ம் ஆண்டின் இந்தியாவின் ஊடுருவலுக்கு பாகிஸ்தானின் உறுதியான பதிலடியால் நிரூபிக்கப்பட்ட படி, எந்தவொரு தவறான சாகசத்துக்கும் எதிராக தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை காப்பதற்கு பாகிஸ்தான் முழு திறனுடன் தயார் நிலையில் உள்ளது" என்று தெரிவித்தார்.