திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடுரோட்டில் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி அருகே உள்ள திருவெறும்பூரை சேர்ந்தவர் கார்த்திக் (29). டிராவல்ஸ் உரிமையாளர். இவர், கார் வாங்குவதற்காக நேற்று இரவு 7.45 மணியளவில் தனது காரில் திண்டுக்கல் வந்தார். நகரில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் அருகே கார் வந்த போது, திடீரென காரின் முன்பகுதியில் இருந்து புகை குபுகுபுவென வெளியேறியது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக் காரை, நடுரோட்டில் நிறுத்திவிட்டு பதறியடித்து கீழே இறங்கினார்.
அதற்குள் காரின் முன்பகுதி மளமளவென எரியத் தொடங்கியது. இதைப்பார்த்த மகளிர் போலீசார் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்தனர். காவல்நிலையத்தில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து கார் மீது ஊற்றினர். இதனால், தீ பரவுவது தடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த திண்டுக்கல் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் காரின் முன்பகுதி எரிந்து நாசமானது. நடுரோட்டில் கார் தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
The post நடுரோட்டில் தீப்பற்றி எரிந்த கார் appeared first on Dinakaran.