விடுதலைப் போராட்டம் தொடங்கி இன்று வரை தமிழ்நாட்டுக்கென்று தனித்துவ குணமுண்டு. நாடு விடுதலையடைந்த பின்னர், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது, நம்முடைய மாநில எல்லைகளை மீட்டெடுக்க உயிரையும் துச்சமென மதித்து குமரி மாவட்டத்தில் 18 பேர் உயிரிழந்தனர். சில பகுதிகள் நம் கையை விட்டுப் போயின. இதனால் பல வளங்களை தமிழகம் இழக்க நேரிட்டது. அதன் தொடர்ச்சியாக, முல்லைப் பெரியாறு, காவிரி நீர் பங்கீடு போன்ற 16 நதி தீரங்களின் பிரச்சினைகள் இன்றைக்கும் தொடர்கின்றன.
இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு, விவசாய சங்கப் போராட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் 48 பேர் உயிரிழந்த துயர நிகழ்வுகள், அரசியலை நம்பி கொள்கைக்காக தீக்குளித்தவர்கள் என ஒரு நெடிய வரலாறு தமிழகத்துக்கு உண்டு. அதேபோல் உலக அளவில், இந்திய – மாநில அளவில் எத்தனையோ அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.