கோவை: பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ‘நம்ம கோவை’ செயலியை, மாநகராட்சி நிர்வாகத்தினர் அறிமுகப்படுத்தியுள்ளனர். கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் ஆன்லைன் முறையில் பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, ‘நம்ம கோவை’ என்ற செயலி மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலியை மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
இச்செயலியின் பயன்பாடுகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது: “பொதுமக்கள் தங்களது செல்போன்களில் உள்ள ப்ளே ஸ்டோர் தளம் வாயிலாக ‘நம்ம கோவை’ என ஆங்கிலத்தில் டைப் செய்து, இச்செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்தவுடன், நமது செல்போன் எண், பாஸ்வேர்ட் ரகசிய குறியீட்டு எண் ஆகியவற்றை இச்செயலியை பயன்படுத்தலாம். மாநகராட்சியின் இணையதளத்தை லேப்டாப் மூலம் நாம் பயன்படுத்துவதை போல் இச்செயலி வாயிலாக பயன்படுத்தலாம்.