அவனியாபுரம்: டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு வழங்கிய அனுமதியை கண்டித்து, மதுரை மாவட்டம், மேலூரில் விசிக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் திருமாவளவன் பங்கேற்றார். முன்னதாக திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது: நீண்ட காலமாக சங் பரிவார் அமைப்புகள் இந்த சதி வேலைகளை செய்து வரும் சூழலில், தற்போது மொழி மற்றும் இனத்தின் பெயரால் அரசியல் செய்யும் அமைப்புகளும் பெரியாரை குறி வைத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சீமானின் பேச்சு நாகரீகத்தின் எல்லையை மீறியதாக, குதர்க்கவாதமாக உள்ளது.
அவர் பேசுகிற அரசியலுக்கு அது அவருக்கே எதிராக முடியும். தேசிய அளவில் மதவெறி தேசியம் குறித்து பாஜ உள்ளிட்ட சங் பரிவார்கள் பேசுகிறார்கள். மதவெறி தேசியம் என்பதுதான் உண்மையான எதிரி. அதை விடுத்து தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் தனது இறுதி மூச்சு வரை தீவிர களப்பணியாற்றிய, சமூகநீதியின் தேசிய அடையாளமாக உள்ள தந்தை பெரியார் அவர்களை கொச்சைப்படுத்துவது ஏற்புடையதல்ல. இந்த போக்கை சீமான் கைவிட வேண்டும். அவரது பேச்சுக்களை அண்ணாமலையும், அவர் சார்ந்துள்ள சங் பரிவார் அமைப்புகளும் மட்டுமே ஆதரிக்கும்.
இவ்வாறு கூறினார்.
The post நாகரீகத்தின் எல்லையை மீறுகிறது சீமான் பேசும் அரசியல் அவருக்கே எதிராக முடியும்: திருமாவளவன் காட்டம் appeared first on Dinakaran.