நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகரில நடை பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் பயன்பாடற்ற கட்டிடங்களை மாநகராட்சி இடித்து அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நாகர்கோவில் மாநகரில் வாகன நெரிசல் என்பது தீராத தலைவலி பிரச்சினை ஆகும். வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்புக்கேற்ப, இங்கு சாலை விரிவாக்கம் செய்யப்பட வில்லை. பொதுமக்கள் நடந்து செல்ல வசதியாக மாநகராட்சி சார்பில் முக்கிய சாலைகளில் நடைபாதைகள் உள்ளன. ஆனால் இந்த நடைபாதைகள் நகரின் முக்கிய சாலைகளில் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகளால் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளன. நாகர்கோவில் கோட்டார் சந்திப்பில் இருந்து, வடசேரி அண்ணா சிலை சந்திப்பு வரை சாலையின் இருபுறமும் நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடைபாதையில் பொமக்கள் நடந்து வர முடியாது.
நகரின் பல்வேறு வர்த்தக நிறுவனங்கள் உள்பட முக்கிய அலுவலகங்களுக்கு செல்பவர்கள் இந்த சாலையை தான் பயன்படுத்துகிறார்கள். இருபுறமும் நடைபாதை அழகாக இருந்தால் பாதசாரிகள் எளிதில் நடந்து வர முடியும். ஆனால் பல இடங்களில் நடைபாதை உடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. சில இடங்களில் வியாபாரிகள் ஆக்கிரமித்து தங்களது விற்பனைக்காக பொருட்களை வைத்துள்ளனர். சிலர், தங்களது கார், பைக்குகளை நிறுத்தி உள்ளனர். இது தவிர போக்குவரத்து போலீசாருக்காக பல வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட கட்டிடம் பாழடைந்துள்ளது. தனியார்கள் சிலர் நடைபாதையை தங்களது சொந்த இடமாகவே மாற்றி கட்டிடத்தை கட்டி உள்ளனர். இவ்வாறு நடைபாதைகளில் பல்வேறு ஆக்கிரமிப்புகளும், குறைபாடுகளும் உள்ளன. மாநகராட்சி மேயர் மகேஷ், ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர் நகரை அழகுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறார்கள்.
இதன் ஒரு கட்டமாக நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கோட்டார் முதல் வடசேரி அண்ணா சிலை சந்திப்பு, வெட்டூணிமடம் சந்திப்பு முதல் மணிமேடை சந்திப்பு, மணிமேடை முதல் மணியடிச்சான் கோயில் சந்திப்பு, வேப்பமூடு முதல் செட்டிக்குளம் சந்திப்பு போன்ற பகுதிகளில் நடைபாதைகள் மாநகராட்சி அமைத்துள்ளது. ஆனால் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இவை சிக்கி கபளீகரம் செய்யப்பட்டுள்ளன. எனவே நகரை அழகுப்படுத்தும் திட்டத்தின் அடிப்படையே நடைபாதை ஆக்கிரமிப்புகளை மீட்பது தான்? எனவே இதன் அடிப்படையில் பயனற்ற கட்டிடங்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நடைபாதைகளில் எந்த வித வியாபார ஸ்தலங்கள் செயல்படவும் அனுமதி அளிக்க கூடாது என்று சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post நாகர்கோவில் மாநகரில் நடைபாதைகளில் ஆக்ரமிப்புகள் அகற்றப்படுமா?.. பொதுமக்கள் நடந்து செல்ல சிரமம் appeared first on Dinakaran.