கராச்சி: நாங்கள் பொறுப்பான நாடாக இருக்கிறோம். தீவிரவாதத்தை பாகிஸ்தானில் இந்தியா பரப்புகிறது என்று பாகிஸ்தான் அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறினார். பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் இந்தியா கொடுக்கும் நெருக்கடியால் பீதியடைந்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் மற்றும் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி ஆகியோர் இந்தியாவுக்கு எதிராக கடுமையான அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
பிரதமர் ஷெபாஸ் ஷரீப் அளித்த பேட்டியில், ‘பஹல்காம் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் மீது இந்தியா கூறிவரும் குற்றச்சாட்டுகள், பழைய குற்றச்சாட்டு கொள்கையின் ஒரு பகுதியாகவே உள்ளது. பாகிஸ்தான் பொறுப்புள்ள நாடாகவும், எந்தவொரு நியாயமான, வெளிப்படையான, நம்பகமான விசாரணையில் பங்கேற்கவும் தயாராக உள்ளது. பஹல்காம் தாக்குதல் குறித்து நியாயமான மற்றும் சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும். ஆதாரமின்றி பாகிஸ்தான் மீது இந்தியா சுமத்திய குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரிக்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
பிரதமர் கூறிய கருத்துக்கு மேலாக ஒரு படி மேலே சென்று, அந்நாட்டு அமைச்சர் மொஹ்சின் நக்வி அளித்த பேட்டியில், ‘பாகிஸ்தானில் தீவிரவாதத்தை இந்தியா பரப்பி வருகிறது. எந்த வகையிலும் நாங்கள் தீவிரவாதத்தை கண்டிக்கிறோம்; ஆனால் யாராவது பாகிஸ்தானுக்கு தீங்கு விளைவிக்க முயன்றால், 240 மில்லியன் பாகிஸ்தானியர்கள் தங்கள் கடைசி மூச்சு வரை போராட தயாராக உள்ளனர். சிந்து நதி நீர் ஓட்டத்தை தடுக்கவோ அல்லது திசை திருப்பவோ முயன்றால், முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம்’ என்றார். முன்னதாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை, பஹல்காம் தாக்குதலை கடுமையாக கண்டித்து, அனைத்து நாடுகளும் ஒத்துழைத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
சவுதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகள் இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ளன. அமெரிக்க அதிபர் டிரம்ப், ‘இந்தியாவும் பாகிஸ்தானும் தாங்களாகவே பிரச்னைகளுக்கு தீர்வு காண்பார்கள்’ என்று நம்பிக்கை தெரிவித்தார். அதே நேரத்தில் இந்தியாவுக்கு தனது முழு ஆதரவை வழங்குவதாகவும் உறுதியளித்தார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடந்தது. தற்போது இரு தரப்பிலும் பெரிய பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் இல்லை; ஆனால் சூழல் மிகவும் பதற்றமாக உள்ளது.
The post நாங்கள் பொறுப்பான நாடாக இருக்கிறோம்… தீவிரவாதத்தை பாகிஸ்தானில் இந்தியா பரப்புகிறது: பாக். பிரதமர், அமைச்சர் ஆவேசம் appeared first on Dinakaran.