புதுடெல்லி: அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பியதை அடுத்து, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று காலை 11 மணிக்கு கூடின. மக்களவை கூடியதும், மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி வத்ரா, வசந்தராவ் சவுதான் ஆகியோர் உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து கேள்வி நேரம் தொடங்கியது. நெடுஞ்சாலைத் துறை தொடர்பான கேள்விக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதில் அளித்தார். எனினும், கேள்வி நேரத்தை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.