
புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கி 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை நடத்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கி உள்ளார். இதன்படி டிசம்பர் 1-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும். இந்த கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக, அர்த்தமுள்ளதாக அமைய வேண்டும். நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். மக்களுக்கு சேவையாற்றும் வகையில் குளிர்கால கூட்டத் தொடர் அமைய வேண்டும். இவ்வாறு அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

