போர்ட் விலா: இந்தியாவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை தொடங்கிய லலித் மோடி பல கோடி ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்காக அவருக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வாழ்நாள் தடை விதித்தது. சிபிஐ, அமலாக்கத்துறை விசாரித்த நிலையில், லலித் மோடி கடந்த 2010ம் ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடினார். அங்கிருந்து அவரை இந்தியாவுக்கு அழைத்து வர தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இங்கிலாந்தில் தொடர்ந்து தங்கியிருக்க லலித் மோடிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
லலித் மோடி பசிபிக் தீவு நாடுகளில் ஒன்றான வனுவாட்டில் முதலீடு திட்டத்தின் மூலம் ரூ.1.3 கோடி கொடுத்து குடியுரிமை பெற்றுள்ளார். அவருக்கு வனுவாட்டு பாஸ்போர்ட் கிடைத்ததைத் தொடர்ந்து, சமீபத்தில் தனது இந்திய குடியுரிமையை ரத்து செய்ய லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தில் லலித் மோடி விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில், லலித் மோடிக்கு வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வனுவாட்டு பிரதமர் ஜோதம் நபாட் நேற்று உத்தரவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக பிரதமர் ஜோதம் நபாட் விடுத்த அறிக்கையில், ‘‘சர்வதேச ஊடகங்களில் சமீபத்தில் வெளியான தகவல்களை தொடர்ந்து லலித் மோடிக்கு வழங்கப்பட்ட வனுவாட்டு பாஸ்போர்ட்டை ரத்து செய்யுமாறு குடியுரிமை ஆணையத்திற்கு அறிவுறுத்தி உள்ளேன். வனுவாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பது ஒரு சலுகை, உரிமை அல்ல. நியாயமான காரணங்களுக்காக குடியுரிமை பெற வேண்டும். ஆனால் நாடு கடத்தலை தவிர்ப்பதற்காக லலித்மோடி குடியுரிமை பெற்றிருப்பது இந்தியாவின் எச்சரிக்கை மூலம் தெளிவாக அறிய முடிகிறது. எனவே அவரது பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வேண்டும்’’ என கூறி உள்ளார்.
The post நாடு கடத்துவதை தவிர்க்க முயற்சிப்பதால் லலித் மோடி பாஸ்போர்ட்டை ரத்து செய்ய வனுவாட்டு பிரதமர் உத்தரவு: இந்திய குடியுரிமையை விட்டுக்கொடுத்த நிலையில் அதிரடி appeared first on Dinakaran.