கடந்த 1991-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான மத்திய அமைச்சரவையில் நிதியமைச்சராக மன்மோகன் சிங் பணியாற்றினார். அப்போது தாராளமயமாக்கத்தின் மூலமாக நாட்டின் பொருளாதாரத்தை அவர் வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். எந்த தொழில் செய்தாலும் உரிமம்பெற வேண்டும் என்ற முறையை அவர் குறைத்தார். விதிமுறைகளை ஒழுங்குபடுத்தி, தொழில் துறையில் அரசு தலையீட்டை குறைத்தார். இது தொழில்துறைக்கு உத்வேகம் அளித்தது.
மேலும் வர்த்தக சீர்திருத்தங்களை மன்மோகன் சிங் அறிமுகப்படுத்தினார். இறக்குமதி வரியை குறைத்து, திறந்தவெளி சந்தை பொருளாதாரத்தை ஏற்படுத்தினார். நாட்டின் முக்கிய துறைகளில் அவர் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தார். அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்களால் நாடு தொடர்ந்து பலன் அடைந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டது.