சென்னை: புழல் அருகே வாக்கிங் சென்றபோது வக்கீலுடன் தகராறு ஏற்பட்டதையடுத்து, வக்கீல் அழைத்து வந்த ராட்வீலர் நாய் முதியவரை கடித்துக் குதறியது. அப்போது தடுக்க வந்த அவரது மனைவி மற்றும் கொத்தனார் ஆகியோர் மீதும் அந்த நாய் பாய்ந்து கடித்துள்ளது. இதில் நாயின் உரிமையாளரான வக்கீல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை புழல் புத்தகரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (75), இரும்பு வியாபாரம் செய்கிறார். நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் ராட்வீலர் ரக நாயுடன் அதே பகுதியைச் சேர்ந்த கவியரசன் (48) என்பவர் வாக்கிங் வந்தார். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்த பகுதியில் எதற்காக இவ்வளவு பெரிய நாயை இந்த நேரத்தில் வாக்கிங் அழைத்து வருகிறீர்கள், இங்கு பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் யார் பொறுப்பு’ எனக் கேட்டிருக்கிறார்.
அதற்கு நாயின் உரிமையாளர் கவியரசன், முதியவரிடம் தகாத வார்த்தைகள் பேசியதோடு ‘நான் சொன்னால் இந்த நாய் உன்னை இப்போது கடிக்கும் பார்க்கிறாயா?’ எனக் கூறியுள்ளார். அதை தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ராட்வீலர் நாயை மாரியப்பனை கடிக்கும்படி கவியரசன் ஏவியதாக தெரிகிறது. இதனையடுத்து ராட்வீலர் நாய் முதியவரை மாறி மாறி கடித்து குதறியுள்ளது.
இதில் அவரது மார்பு, பின் பக்க தொடை உள்ளிட்டவற்றை ராட்வீலர் நாய் தொடர்ந்து கடித்துக் குதறியதால் பலத்த காயம் அடைந்து, ரத்தம் சொட்ட சொட்ட மாரியப்பன் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அவருடைய மனைவி மற்றும் அருகில் வசிக்கும் கொத்தனாரான ரமேஷ் (47) ஆகியோர் ஓடிவந்துள்ளனர். சம்பந்தப்பட்ட வழக்கறிஞரிடம் இதுகுறித்து கேட்கவே, அவர்களையும் மிரட்டிய கவியரசன், அவர்கள் மீதும் நாயை ஏவிவிட்டுள்ளார். இதில் அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து தனது கணவர் மாரியப்பனை மீட்ட மனைவி, அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குச் சென்று முதலுதவி சிகிச்சை அளித்தார். மேலும் நாய் கடிக்கான மருந்தும் செலுத்தப்பட்டதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து புழல் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் கவியரசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மாரியப்பன், அவரது மனைவி மற்றும் கொத்தனார் ரமேஷ் ஆகியோர் புகார் அளித்தனர். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் எதிரொலியாக, சம்பந்தப்பட்ட ராட்வீலர் நாயை பிடிப்பதற்கு புழல் போலீசார் மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post ‘நான் சொன்னால் உன்னை கடிக்கும் பார்க்கிறாயா?’ உரிமையாளர் ஏவியதால் முதியவரை கடித்து குதறிய ராட்வீலர்: தடுக்க வந்த மனைவி, கொத்தனார் மீதும் பாய்ந்தது appeared first on Dinakaran.