சென்னை: ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான ரிசல்ட் நேற்று வெளியிடப்பட்டது. இதில் அகில இந்திய அளவில் 1009 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இதில் நான் முதல்வன் திட்டத்தில் படித்த மாணவர்கள் 50 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு அளவில் சிவச்சந்திரன் என்ற மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். இவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து ெதரிவித்துள்ளார். மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) ஆண்டு தோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட 26 பணிகளுக்கான சிவில் சர்வீஸ் தேர்வை நடத்துகிறது. கடந்த ஆண்டு (2024ம் ஆண்டுக்கானது) 1056 பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கு 9 லட்சத்து 92 ஆயிரத்து 599 பேர் விண்ணப்பித்தனர். இதில், 5 லட்சத்து 83 ஆயிரத்து 213 பேர் முதல்நிலை தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
தமிழ்நாட்டில் 25 ஆயிரம் பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி நடந்தது. தொடர்ந்து ஜூலை 1ம் தேதி முதல் நிலை தேர்வுக்கான ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதில் இந்தியா முழுவதும் 14,627 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 650 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தை பொறுத்தவரை சுமார் 650 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் சிவில் சர்வீஸ் பணிக்கான மெயின் தேர்வு செப்டம்பர் 20ம் தேதி, 21ம் தேதி, 22ம் தேதி, 28ம் தேதி, 29ம் தேதி என 5 நாட்கள் நடந்தது. தொடர்ந்து மெயின் தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்டது. இதில் 2845 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். இவர்களுக்கான நேர்காணல் கடந்த ஜனவரி மாதம் 7ம் தேதி முதல் ஏப்ரல் 17ம் தேதி வரை நடைபெற்றது. நேர்காணல் முடிவடைந்ததையடுத்து இறுதி தேர்வு முடிவை யுபிஎஸ்சி தனது இணையதளமான www.upsc.gov.in நேற்று மாலை வெளியிட்டது.
இதில் அகில இந்திய அளவில் 1099 பேர் சிவில் சர்வீஸ் பணிகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழக அளவில் 57 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சக்தி துபே என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஹர்ஷிதா கோயல் என்பவர் இரண்டாமிடமும் டோங்க்ரே அர்ஷித் பராக் என்பவர் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் 335 பேர் பொதுப்பிரிவினர், 109 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், 318 பேர் ஓபிசி, 160 பேர் எஸ்சி, 87 பேர் எஸ்டி, 45 பேர் மாற்றுத்திறனாளிகள் ஆவர். அகில இந்திய அளவில் 23வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்துள்ள பி.சிவச்சந்திரன், தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தில் சேர்ந்து படித்துள்ளார். இதே போல தேசிய அளவில் 39வது இடத்தை பெற்ற மோனிகா என நான் முதல்வன் திட்டத்தில் படித்த மாணவர் ஆவார்.
மேலும் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் படித்த 50 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் , “நான் மட்டும் முதல்வன் அல்ல, தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டு தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது. இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவுத்திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் குடிமைப்பணி தேர்விற்காக தமிழ்நாடு அரசு பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெற்றவர்களில், 50 பேர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றுள்ள செய்தி அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தோம். குறிப்பாக, மாநில அளவில் முதலிடமும்-அகில இந்திய அளவிலான தரவரிசைப்பட்டியலில் 23-ஆம் இடமும் பெற்று சாதனை படைத்துள்ள தம்பி சிவச்சந்திரன், அகில இந்திய அளவில் 39வது இடத்தை பிடித்துள்ள தங்கை மோனிகா ஆகியோருக்கு என்னுடைய பாராட்டுகள். நான் முதல்வன் திட்டம், இலக்கை நோக்கி சரியான திசையில் நடைபோட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பிறகு, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டில் இருந்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. நான் முதல்வன் மூலம் ஒன்றிய அரசுப்பணிக்கு தேர்வாகியுள்ள தமிழ்நாட்டு இளைஞர்கள், ஏழை – எளிய மக்கள் மேன்மையடையும் வண்ணம் செயலாற்றிட என் அன்பையும்-வாழ்த்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: யுபிஎஸ்சி 2024ம் ஆண்டு குடிமைப் பணிகளுக்கான இறுதி தேர்வு முடிவு வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அளவில் 1009 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் இருந்து 57 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 45 மாணவர்கள் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் பயின்றவர்கள். மேலும் இந்திய அளவில் 236 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆர்.மோனிகா 39வது இடத்தையும், பவித்ரா என்ற மாணவி 42வது இடத்தையும் பெற்றுள்ளார். டெல்லியில் உள்ள எங்கள் அகடாமியில் நேர்முக தேர்வில் பயிற்சி பெற்ற ராஜ் கிருஷ்ணா ஜா அகில இந்திய அளவில் 8வது இடத்தை பிடித்துள்ளார்.
தேர்வு முடிவுகள் வெளியான 15 நாட்களில், தேர்ச்சி பெற்றவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை யுபிஎஸ்சி வெளியிடும். இதில் ரேங்க் அடிப்படையிலும், இடஒதுக்கீடு பட்டியல் அடிப்படையில் அவர்களுக்கு பணிகள் ஒதுக்கப்படும். யாருக்கு என்ன பதவி என்பது குறித்து இன்னும் ஒன்றரை மாதத்தில் அறிவிக்கப்படும். அதாவது ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் மற்றும் மத்திய அரசின் ஏ, பி பிரிவு பணிகளில் அமர்த்தப்படுவார்கள். அதன் பிறகு முசோரியில் உள்ள பயிற்சி மையத்தில் அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமும் 6-8 மணிநேரம் பயிற்சி எடுத்து வந்தேன்
யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 23வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்த சிவ சந்திரன் கூறுகையில், “யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதற்கு நான் முதல்வன் திட்டம் மிகவும் உதவியாக இருந்தது. தினமும் 6-8 மணி நேரம் தேர்வுக்கு பயிற்சி எடுத்து வந்தேன்” என்றார்.
கைகொடுத்த நான் முதல்வன் திட்டம்
தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டம் மூலம் யுபிஎஸ்சி தேர்ச்சி பெற்ற மதுரையை சேர்ந்த சங்கரபாண்டியன் ராஜ் உருக்கம்: 12ம் வகுப்பு வரை தமிழ்வழி கல்வியில் தான் படித்தேன். எங்கப்பா, அம்மா 2 பேரும் டெய்லர்தான். சரியான வருமானம் இல்லாத காரணத்தால் கல்லூரி படிப்பை தொடர முடியவில்லை. அதனால் வேலை பார்த்துக் கொண்டே தொலைதூர கல்வியை பயின்றேன். இதற்கு முன் நான் எழுதிய 7 முறையும் எனக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. 6 மாதம் வேலைக்கு சென்று அந்த பணத்தை வைத்து அடுத்த 6 மாதம் படிப்பேன். அது மிகவும் கஷ்டமாக இருந்தது.
மாதம் ரூ. 6 ஆயிரம் கிடைத்தால் கூட 2 வருடங்களில் தேர்ச்சி பெற்று விடலாம். ஆனால் அதுகூட எனக்கு கிடைக்கவில்லை. பின்னர் நான் முதல்வன் திட்டம் மூலம் மாதம் ரூ.7,500 உதவித்தொகை கிடைத்ததால் எந்த வேலைக்கும் போகாமல் படிப்பில் முழு கவனம் செலுத்த முடிந்தது. நான் முதல்வன் திட்டம் தான் என்னுடைய வெற்றிக்கு முதல் காரணம். ஆங்கிலம் மற்றும் இந்திக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்த தேர்வு தமிழிலும் எழுதலாம் என்ற வாய்ப்பு கிடைத்ததால் என்னால் வெற்றி அடைய முடிந்தது. இவ்வாறு அவர் கூறினார்.
The post நான் முதல்வன் திட்டத்தில் படித்த மாணவர்கள் சாதனை; ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வில் 50 பேர் வெற்றி: தமிழ்நாடு அளவில் சிவச்சந்திரன் முதலிடம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் appeared first on Dinakaran.