சென்னை: 2024-25ம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட் உரையில், ஒன்றிய பணியாளர் தேர்வாணையம், ரயில்வே மற்றும் வங்கிப் பணித் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகம் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தோடு தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு, உறைவிட வசதியோடு கூடிய தரமான ஆறுமாத காலப் பயிற்சி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 24.9.2024 அன்று நான் முதல்வன் வங்கிப் பணிகளுக்கான உறைவிட பயிற்சி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற 360 மாணவர்களில் 266 பேர், பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கிளார்க் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இத்திட்டம், துவங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே பயிற்சி பெற்றவர்களில், 73 சதவீதம் பேர், ஸ்டேட் வங்கியின் கிளார்க் பணிக்கான முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள், ஏப்ரல் 10 மற்றும் 12ம் தேதி நடைபெற உள்ள முதன்மை தேர்வில் கலந்துகொள்ள பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த திட்டம், கடந்தாண்டு பட்ஜெட் உரையில் முதன்முறையாக அறிவிக்கப்பட்டு, சேலம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் நடந்து வருகிறது. மேலும், ஆண்டுதோறும் 6 மாத காலம் வழங்கப்படும் இந்த உறைவிட பயிற்சிக்கான பயனாளிகள் நான் முதல்வன் திட்டத்தின் வாயிலாக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால் மதிப்பீட்டுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது என மேம்பாட்டு கழகம் தெரிவித்துள்ளது.
The post நான் முதல்வன் திட்டம்; வங்கி பணிகளுக்கான உறைவிட பயிற்சி திட்டத்தில் 73 சதவீதம் பேர் தேர்ச்சி: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் தகவல் appeared first on Dinakaran.