பிலாஸ்பூர்: நாய் அசுத்தம் செய்த மதிய உணவைச் சாப்பிட்ட 84 மாணவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் பலோடாபஜார்-படாப்புரா மாவட்டத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது, மதிய உணவுத் திட்ட ஊழியர்கள், நாய் அசுத்தம் செய்த உணவை 84 மாணவர்களுக்கு வழங்கிவிட்டதாகத் தெரியவந்துள்ளது.
விவரம் அறிந்த பின்னர் அந்த மாணவர்களுக்கு 3 டோஸ் ரேபீஸ் தடுப்பூசியை செலுத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. இதனிடையே இந்த விவகாரத்தை அரசின் கவனக்குறைவு என்று கூறி சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா, நீதிபதி பிபு தத்தா குரு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.