சென்னை: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை தொடர்பான விசாரணை நாளையும் நடைபெறவுள்ளதால் நாளை பேசுகிறேன் என திநகர் வீட்டில் சசிகலா செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைந்த பிறகு கடந்த 2017ஆம் ஆண்டு அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். பின்னர் அந்த எஸ்டேட்டிலிருந்து பல பொருட்கள் திருடு போயுள்ளதாக தெரிகிறது.
சில பொம்மைகளும் கடிகாரமும்தான் திருடு போயின என சொல்லப்பட்டு வந்த நிலையில் அங்கு நிச்சயம் வேறு ஏதேனும் பணமோ நகையோ முக்கிய ஆவணங்களோ திருடப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.
பொம்மை
வெறும் பொம்மைகளை எடுப்பதற்காக கொள்ளையர்கள் இத்தனை ரிஸ்க் எடுத்து வந்திருக்க மாட்டார்கள் என்பது போலீஸாரின் சந்தேகமாக இருக்கிறது. இந்த நிலையில் இந்த வழக்கில் அடுத்தடுத்து மர்மங்கள் நிறைந்திருந்தன. கார் டிரைவர் கனகராஜ் சேலம் ஆத்தூரில் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது கார் மோதி உயிரிழந்தார்.
காவலாளி கொலை சம்பவம்
காவலாளி கொலை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சயான் குடும்பத்துடன் கேரளாவுக்கு காரில் தப்பி செல்லும் போது விபத்தில் சிக்கினார். அவரது மனைவி, குழந்தை உயிரிழந்தனர். அது போல் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை செய்து கொண்டார். அந்த பங்களாவின் சிசிடிவி காட்சிகளை பார்வையிடும் பணியை தினேஷ் செய்து வந்தார்.
5 பேர் மரணம் இப்படியாக ஓம் பகதூர், கனகராஜ், சயான் மனைவி, மகள், தினேஷ் ஆகிய 5 பேரின் மர்ம மரணங்கள் நடந்துள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 200 க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அந்த வகையில் இன்றைய தினம் சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலா வீட்டில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.