ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவுக்காக பிரதமர் நாளை மறுதினம் வருவதையொட்டி ராமேஸ்வரத்தில் இன்று முதல் 3500 போலீசார் ஐந்தடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். மீனவர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்க நாளை மறுதினம் (ஏப். 6) பிரதமர் மோடி ராமேஸ்வரம் வருகிறார். இதற்கான முன்னேற்பாடுகளை மத்திய, மாநில பாதுகாப்பு அதிகாரிகள் தீவிரமாக செய்து வருகின்றனர். பிரதமரின் தனி பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளின் ஆய்வுக்கு பிறகு, சிறப்பு பாதுகாப்பு பிரிவினர் கட்டுப்பாட்டில் ராமேஸ்வரம் முழுமையாக கொண்டு வரப்பட்டுள்ளது. பிரதமர் செல்லும் இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேசிய வெடிகுண்டு தடுப்பு சிறப்பு பிரிவு அதிகாரிகளும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் வருகையொட்டி இன்று முதல் ஐந்தடுக்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடவுள்ளனர். மண்டபம் முகாம் ெஹலிபேட் தளம் முதல் ராமேஸ்வரம் கோயில் வரை 20 கிமீ தூரத்திற்கு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 3,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், பிரதமர் மோடி பயணிக்கும் ஹெலிகாப்டர், மண்டபம் ஹெலிபேட் தளத்தில் தரையிறக்கப்படுகிறது. அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலை பாலம் வருகை தந்து அங்கிருந்து தூக்குப்பாலத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
இதையடுத்து ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்கிறார். பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் பாம்பனில் உள்ள ஹெலிபேட் பகுதியை நேற்று ஆய்வு செய்தனர். மேலும், பிரதமர் வருகையால் மீனவர்கள் இன்று முதல் 6ம் தேதி வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post நாளை மறுதினம் ராமேஸ்வரத்திற்கு பிரதமர் வருகை: 3 நாட்கள் கடலுக்கு செல்ல தடை; பாதுகாப்பு பணியில் 3500 போலீசார் appeared first on Dinakaran.