டெல்லி: மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தில் நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு 6,434 கோடி ரூபாயை ஒன்றிய அரசு நிலுவையாக வைத்திருப்பது தெரிய வந்துள்ளது. மறுபுறத்தில் இந்த திட்டத்திற்கு நடப்பு நிதியாண்டிலும் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்காமல் இருப்பது மாநிலங்களை கவலை அடைய வைத்துள்ளன. மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பதில் அளித்த ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் கமலேஷ், நடப்பு நிதியாண்டில் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய தொகையாக ரூ.6,434 கோடி இருப்பதாக தெரிவித்தார்.
இதில் முதல் இரண்டு இடங்களில் தமிழ்நாடும், உத்திரப் பிரதேசமும் உள்ளன. இவ்விரு மாநிலங்களுக்கு மட்டும் நடிப்பு நிதியாண்டில் ரூ.2,867 கோடியை ஒன்றிய அரசு பாக்கி வைத்துள்ளது. தமிழ்நாட்டிற்கு ரூ.1,652 கோடியும், உத்திரப் பிரதேசத்திற்கு ரூ.1,214 கோடியும் ஒன்றிய அரசு வழங்க வேண்டியுள்ளது. ஏற்கனவே ரூ.12,000 கோடி நிதிப்பற்றாக்குறையில் செயல்படும் 100 நாள் திட்டத்திற்கு தற்போதைய நிதிநிலை அறிக்கையிலும் நிதி ஒதுக்கீட்டில் மாற்றம் கொண்டுவராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 13ம் தேதி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய ரூ.1,056 கோடி நிலுவை தொகையை விடுவிக்குமாறு கேட்டு இருந்தார். அத்துடன் தொழிலாளர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை உயர்த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார். இதற்கிடையே 100 நாள் திட்டத்தில் 1.55 கோடி தொழிலாளர்கள் நீக்கப்பட்டு இருப்பதும் பேசும் பொருளாகி உள்ளது. போலியான வேலை அட்டை உள்ளிட்ட காரணங்களால் 2022-23ல் 86 லட்சத்திற்கு மேற்பட்டோரும், 2023-24ல் 68 லட்சத்திற்கும் மேற்பட்டோரும் நீக்கப்பட்டுள்ளனர்.
The post நிதிப்பற்றாக்குறையில் செயல்படும் 100 நாள் வேலை திட்டம்: தமிழ்நாடு, உத்திரப்பிரதேசத்திற்கு நிலுவைத் தொகை அதிகம்!! appeared first on Dinakaran.