சென்னை: சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் உறுப்பினர் ராமசந்திரன்( இந்திய கம்யூனிஸ்டு) பேசுகையில், “தளி தொகுதியில் வனத்தையொட்டி உள்ள குடியிருப்பு பகுதிகளில் வனவிலங்குகள் புகாதவாறு இரும்புவட கம்பி வேலிகள் அமைக்க வேண்டியது’’குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்து அமைச்சர் பொன்முடி பேசியதாவது: யானைகளின் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. ஒசூர் வன பகுதியில் 35.20 கிலோமீட்டருக்கு இரும்பு வட கம்மி அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் இது போன்ற நடவடிக்கை நடக்க வேண்டாம் என்ற அடிப்படையில் தான் கோயம்புத்தூரில் கூட ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அந்த அடிப்படையில் 5 கோடி செலவில் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு நவீன யானை பாதை பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
யானைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்காகத்தான் வனவிலங்குகளை கம்பி வேலிகள் நாங்கள் அமைத்திருக்கிறோம். அந்த அடிப்படையில் இன்னும் பல பகுதிகளில் அந்த பிரச்சனைகள் இருந்தாலும் படிப்படியாக நிதிநிலைக்கேற்ப அவைகளை உருவாக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். வனவிலங்குகள் தாக்கி மனிதர்கள் இறப்புக்கு ரூபாய் 10 லட்சம் வழங்கப்படுகின்றது. அது அதிகமாக வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதே போல வனத்துறையில் பணியாற்றுகிற ஊழியர்களுக்கும் இறந்தலும் பத்து லட்ச ரூபாய் தான் கொடுக்கிறோம். அதையும் முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, அரசு ஊழியர்கள் உயிரிழந்தால் எவ்வளவு நிதி வழங்கப்படுகிறதோ, அதே ஊதியத்தை வனவிலங்கு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறோம்.
அதேபோல நிதி நிலைமைக்கு ஏற்றவாறு வனவிலங்குகள் தாக்கி உயிர் இழந்தவர்களுக்கும் நிதி உயர்த்தி கொடுப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படும். மேலும், வனவிலங்குகள் தாக்கி கடுமையான காயங்களுக்கு 59 ஆயிரத்து 100 ரூபாயும், பயிர் சேதம் ஏற்பட்டால் ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாயும், தென்னை மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு 500 ரூபாயும், முழுமையாக சேதம் அடைந்த வீட்டிற்கு 55 ஆயிரத்து 100 ரூபாயும், முழுமையான சேதம் அடைந்த குடிசை வீட்டிற்கு 10 ஆயிரம் ரூபாயும், கறவை மாடு உயிரிழந்தால் 30 ஆயிரம் ரூபாயும், செம்மறி ஆட்டிற்கு 3 ஆயிரம் ரூபாயும், வளர்ப்பு பன்றிகள் 3000 ரூபாயும் வழங்கப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது.இவ்வாறு அவர் கூறினார்.
The post நிதி நிலைமைக்கு ஏற்றவாறு வனவிலங்குகள் தாக்கி உயிர் இழந்தவர்களுக்கும் நிதி உயர்த்தி கொடுப்பதற்கான ஏற்பாடு: சட்டசபையில் அமைச்சர் பொன்முடி தகவல் appeared first on Dinakaran.