சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம், அம்பத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், அன்னம் தரும் அமுதக்கரங்கள் திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி, பகுதி செயலாளர் எம்.டி.ஆர் நாகராஜ் ஏற்பாட்டில் அம்பத்தூரில் நடந்தது. இதில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று, பொதுமக்களுக்கு உணவு வழங்கினார். நிகழ்ச்சியில் அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல, அம்பத்தூர் மண்டல குழு தலைவர் பி.கே.மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அளித்த பேட்டி: மாநில அரசுகளுக்கு நிதி பகிர்வு செய்வதில் ஒன்றிய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது. பாஜ ஆளும் மாநிலங்களுக்கும், பாஜ ஆளாத மாநிலங்களுக்கும் பாரபட்சத்துடன் நிதி ஒதுக்குகிறது. தமிழ்நாட்டிற்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வந்தாலும் திரும்பத் திரும்ப ஒரே பொய்யை தான் சொல்லிக்கொண்டு இருக்கிறார்.
அவரது பொய்களை நம்ப மக்கள் தயாராக இல்லை. இன்றைய கல்விதான் நாளைய சமுதாயம் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட கல்விக்கு நிதி ஒதுக்காமல் இருப்பதும், மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் நிதி ஒதுக்குவோம் என கூறுவதும் உண்மையில் நிதி அமைச்சருக்கு மனசாட்சி இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.
தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி மீது எந்த குறைகளையும் கூற முடியாததால், எதிர்க்கட்சிகள் ஆற்றாமையில் அவதூறு பரப்புகின்றனர். நிதி பகிர்வில் பாரபட்சம் குறித்து தமிழக நிதி அமைச்சர் தெளிவாக சட்டமன்றத்தில் பேசி உள்ளார். வேண்டுமென்றால் ஒன்றிய நிதி அமைச்சரை தமிழக நிதி அமைச்சருடன் வாதம் செய்ய சொல்லுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.
* மாநில அரசுகளுக்கு நிதி பகிர்வு செய்வதில் ஒன்றியஅரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடந்து கொள்கிறது
The post நிதி பகிர்வில் பாரபட்சம் ஒன்றிய நிதியமைச்சருடன் விவாதம் நடத்த தயார்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு சவால் appeared first on Dinakaran.