திருப்பூர்: தமிழகம் முழுவதும் போதை பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசின் சார்பில் போதைப்பொருள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என பெட்டிக்கடை முதல் மளிகை கடை, பேக்கரி, உணவகங்கள் வரை உணவு பாதுகாப்பு துறையினரும், போலீசாரும் சோதனை மேற்கொண்டு அவ்வாறு புகையிலை பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சீல் வைப்பது மட்டுமல்லாது அபராதமும் விதிக்கப்பட்டு கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி சார்ந்த பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் திருப்பூரில் செயல்பட்டு வருகின்றன.
இவை மட்டுமல்லாது திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கட்டுமான துறை, பேக்கரி மற்றும் உணவகங்கள், மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணிபுரிவதற்காக தமிழகத்தின் பிற மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமல்லாது குஜராத், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம், ஒடிசா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வந்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர். அந்தந்த மாநிலங்களில் வேலை வாய்ப்பின்மை மற்றும் போதிய ஊதியம் இல்லாததால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்துடன் திருப்பூர் நோக்கி வருகின்றனர். நாளுக்கு நாள் திருப்பூர் நோக்கி வரும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரக்கூடிய நிலையில் அவர்களின் முக்கிய போக்குவரத்து பாதையாக ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்டது போல ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் வெளிமாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகளால் தடை செய்யப்படவில்லை. அங்கு எளிதாக இப்பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் கஞ்சா புழக்கமும் அங்கு அதிகம். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வடமாநில தொழிலாளர்கள் சிலர் அங்கிருந்து புகையிலை பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி வந்து இங்குள்ள வடமாநில தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வெளி மாநிலங்களில் இருந்து திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பணி நிமித்தமாக வரும் வட மாநில தொழிலாளர்கள் சிலர் அங்கிருந்து குறைந்த விலைக்கு புகையிலை மற்றும் போதை பொருட்களை குறைந்த விலைக்கு வாங்கி வந்து இங்குள்ள வடமாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வது அதிகரித்து வருகிறது.
மாநகர மற்றும் மாவட்ட போலிசார் அவ்வப்போது இதுபோன்று வெளிமாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு புகையிலை மற்றும் போதை பொருட்கள் கொண்டு வருபவர்களை கண்டறிந்து கைது செய்து போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். இருப்பினும் ரயில் நிலையங்களில் தொடர் கண்காணிப்பு இல்லாததன் காரணமாக எளிதாக ரயில் மூலமாக வரும் வடமாநில தொழிலாளர்கள் போதை மற்றும் புகையிலை பொருட்களை கைமாற்றி விடுகின்றனர்.
வெளி மாநிலங்களில் இருந்து கேரளா செல்லும் ரயில் மூலம் திருப்பூர் வந்து இறங்கும் வட மாநில தொழிலாளர்கள் சிலர் ரயில் நடைமேடை ஒன்றில் இறங்கி தாங்கள் கொண்டு வரும் பார்சல் அடங்கிய பைகளை ஏற்கனவே ரயில் நிலையத்தில் காத்திருக்கும் வடமாநில நபர்களிடம் கொடுத்து விட்டு உடனடியாக தங்கள் உடைமைகளை மாற்றிவிட்டு நடைமேடை இரண்டிற்கு சென்று கேரளாவில் இருந்து மீண்டும் வடமாநிலம் செல்லும் அடுத்த ரயிலில் ஏறி செல்கின்றனர்.
சில நிமிடங்களுக்குள்ளாக கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை கைமாற்றுகின்றனரா? என்ற சந்தேகம் எழுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் மற்றும் மதுவிலக்கு போலீசார் தொடர் கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
The post நிமிடத்தில் உடை மாற்றி ரயில் மாறும் வடமாநில வாலிபர்கள்; திருப்பூர் ரயில் நிலையத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் கைமாற்றம்: கண்காணிப்பை தீவிரப்படுத்த கோரிக்கை appeared first on Dinakaran.