நியூயார்க்: மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வரும் சூழலில், நியூயார்க்கில் ஐ.நாவுக்கான ஈரான் தூதரை, ட்ரம்ப் அரசின் செயல்திறன் நிறுவனத்தின் இணை இயக்குநரான எலான் மஸ்க் ரகசியமாக சந்தித்துள்ளதாகவும், அமெரிக்கா- ஈரான் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில் டொனால்ட் ட்ரம்ப் அதிபராக மகுடம் சூட உள்ளார். இச்சூழலில், இஸ்ரேல் – ஈரான் இடையே போர் எப்போது வேண்டுமானாலும் முழுவீச்சில் மூளும் என்பதால், சர்வதேச நாடுகளே அச்சத்தில்தான் உள்ளன. இந்த நிலையில், ஐ.நாவுக்கான ஈரான் தூதர் அமீர் சயீத் இரவானி, எலான் மஸ்க் ஆகிய இருவரும் நியூயார்க்கில் ரகசியமாக சந்தித்துள்ளனர். அவர்கள் இருவரும் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தெரிகிறது. இரு தரப்புக்கும் இடையே நடந்த இந்தச் சந்திப்பு நேர்மறையானதாக இருந்ததாகவே சொல்லப்படுகிறது.