புதுடெல்லி: பிஹாரின் சுயாதீன மதுபானி கலைஞரான துலாரி தேவிக்கும், அந்தக் கலைக்கும் மரியாதை செய்யும் விதமாக இன்று (சனிக்கிழமை) பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் உடுத்தி வந்த சேலை வழக்கம் போல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நாட்டின் 2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட்டாகும். ஒவ்வொரு பட்ஜெட்டை தாக்கலைப் போலவே அவர் அணிந்திருக்கும் சேலையும் எதிர்பார்ப்பைகளை உருவாக்கும். ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் ஜவுளி பாரம்பரியம் மற்றும் பாரம்பரிய கைவினைக் கலைத்திறனை வெளிப்படுத்தும் விதமாக அந்தச் சேலைகள் இருக்கும். இந்த ஆண்டும் அதற்கு விதிவிலக்கல்ல.