நேப்பிடா: மியான்மர் நிலநடுக்கத்தில் இதுவரை 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3,500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் (பர்மா) மோனிவா நகருக்கு அருகே நேற்று முன்தினம் காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 7.7 ஆக பதிவானது. அடுத்த 10 நிமிடங்களில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அலகில் 6.8 ஆக பதிவானது. பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. மியான்மர் தலைநகர் நேப்பிடா, சாகைங், மண்டலை, பைகோ, மாகுவே, ஷான் ஆகிய 6 மாகாணங்கள் நிலநடுக்கத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த 6 மாகாணங்களில் அவசர நிலை அமல் செய்யப்பட்டிருக்கிறது.