திருச்சி: ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள ஊக்கத் தொகையை கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மூலம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் 366 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் 19,800 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பசும்பால் ரூ.35, எருமைப் பால் ரூ.45 என்ற விலையில், தினமும் 2.20 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால், தனியார் நிறுவனங்கள் இதைவிட கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்கின்றன.
இதனிடையே, பால் உற்பத்தியாளர்களுக்கு கடந்தாண்டு நவம்பர் முதல் லிட்டருக்கு ரூ.3 ஊக்கத் தொகையாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று ஆவின் நிர்வாகம் அறிவித்தது. ஆனால், பல இடங்களில் இதுவரை வரவு வைக்கப்படவில்லை என பால் உற்பத்தியாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் அயிலை சிவசூரியன் கூறியது: திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை, அயிலாப்பேட்டை, புங்கனூர் போன்ற வசதியான சங்கங்கள்தான் பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை ஊக்கத் தொகை வழங்கியுள்ளன.