திருப்பூர்: நீட் தேர்வு சரியாக எழுதாததால் பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு மாணவர் ஒருவர் மாயமானார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சித்தம்பலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் தனபால். விசைத்தறி தொழிலாளி. இவரது மனைவி சாவித்திரி. இவர்களின் மகன் சங்கீர்த்தன் (18). அரசு பள்ளி மாணவரான இவர், மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு கடந்த ஆண்டு நீட் நுழைவுத்தேர்வு எழுதிய நிலையில் 230 மதிப்பெண்கள் மட்டுமே பெற்றார்.
இதனால், மீண்டும் கடந்த ஆண்டு முழுவதும் நீட் தேர்வுக்காக ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று வந்துள்ளார். நேற்று முன்தினம் 2வது முறையாக திருமுருகன்பூண்டியில் உள்ள மையத்தில் நீட் தேர்வை எழுதிவிட்டு வீடு திரும்பி உள்ளார்.
பின்னர், வினாத்தாள்களை வைத்து இரவு முழுவதும் எவ்வளவு மதிப்பெண்கள் வரும் என சரிபார்த்து உள்ளார். வீட்டில் கடிதம் எழுதி வைத்து விட்டு மாயமானார். நேற்று காலை அந்த கடிதத்தை பார்த்து பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர் எழுதியிருந்த கடிதத்தில் அம்மா, அப்பா நான் உங்களுக்கு கொடுத்த வாக்கை என்னால் காப்பாத்த முடியவில்லை, நான் டாக்டராகனும்னு சொன்ன உடனே, எனக்கு என்ன வேணும்னு கேட்டு எல்லாமே செஞ்சீங்க. என்னை கோச்சிங் கிளாஸ் சேத்து விடுறேன்னு சொன்னீங்க. ஆனா நான் தான் வீட்டில் இருந்தே படிக்கிறேன் என்று சொன்னேன். என்னால் சொன்னதை செய்ய முடியவில்லை. இருந்தாலும் என்னுடைய கனவை என்னால் விட முடியவில்லை.
என்னை 18 வருஷமா சுமந்து கஷ்டப்பட்டு வளர்த்தீங்க. இனிமேல் நான் உங்களுக்கு பாரமா இருக்க விரும்பல. அதனால் நான் வீட்டை விட்டு வெளியே போறேன். நிரந்தரமா இல்லை. எல்லாம் கொஞ்ச நாள் தான். திரும்பி வருவேன் ஒரு எம்.பி.பி.எஸ் சீட்டோட. நான் இதுவரைக்கும் சொன்ன எதையும் செஞ்சது இல்லை. ஆனா நான் ஒரு எம்பிபிஎஸ் சீட்டோட வீட்டுக்கு திரும்பி வருவேன். நான் எந்த ஒரு தப்பான முடிவையும் எடுக்க மாட்டேன். நீங்களும் எடுக்க மாட்டேங்கனு நம்பி தான் போறேன். இந்த முடிவு, நான் செஞ்ச தப்புக்கு நான் கொடுக்கிற தண்டனை. நிச்சயம் ஒரு டாக்டராக திரும்பி வருவேன். எனக்கு படிப்புக்கு தேவையான டாக்குமெண்ட்ஸ், புக் மட்டும் எடுத்துச் செல்கிறேன். மீண்டும் திரும்பி வருவேன் என அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது. இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்தில் கடிதத்துடன் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். மாயமான மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
* ‘திரும்பி வா மகனே’
இது குறித்து சங்கீர்த்தனனின் பெற்றோர் கூறுகையில், சிம்கார்டை உடைத்து வீட்டில் வைத்துவிட்டு வெறும் மொபைல் போனை எடுத்துச் சென்றுள்ளான். எங்கிருந்தாலும் வீட்டிற்கு திரும்பி வந்து விடு மகனே. உன் விருப்பபடியே மீண்டும் படித்துக் கொள்ளலாம் என்றனர்.
The post நீட் தேர்வு சரியாக எழுதாததால் அச்சம் கடிதம் எழுதி வைத்துவிட்டு மாணவர் திடீர் மாயம் appeared first on Dinakaran.