நீலகிரி: நீட் விலக்கு அளித்தால்தான் பாஜவுடன் கூட்டணி என்று சொல்வாரா? என்று எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் விடுத்து உள்ளார். நீலகிரியில் நடந்த அரசு விழாவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழ்நாடு அரசு அனுப்பிய ‘நீட்’ விலக்கு சட்ட மசோதவை ஒன்றிய பாஜ அரசு நிராகரித்து உள்ளது. இது தொடர்பாகவும் சட்டமன்றத்தில் அறிவித்து உள்ளேன். இதற்காக அடுத்த கட்டமாக வரும் 9-ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடக்கிறது.
இந்நிலையில், எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் நீட் காரணமாக மாணவி பலியானதற்கு திமுகவின் மீது குற்றம்சாட்டி அறிக்கை விடுகிறார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இருந்தபோது நீட் தேர்வு வந்ததா?. கலைஞர் முதல்வராக இருந்தவரையும் நீட் இல்லை. ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வு தமிழ்நாட்டில் அனுமதிக்கவில்லை. அவர் மறைவுக்கு பிறகுதான் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியும் பாஜவின் பாதம் தாங்கிகளாக இருந்து கொண்டு நீட் தேர்வை அனுமதித்தனர்.
நான் இப்போது கேட்பது, நீங்கள் பாஜவுடன் கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்தபோது ஏன் நீட் விலக்கு வேண்டும்? என்ற கோரிக்கையை அவர்களிடம் முன்வைக்கவில்லை. ஆனால், இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நீட் விரும்பாத மாநிலத்திற்கு நீட் விலக்கு அளிக்கப்படும் என ராகுல்காந்தி உறுதிமொழி அளித்தார். அதை நாங்கள் தான் அவரை சொல்ல வைத்தோம். இப்போது, பழனிசாமி நீட் ரகசியம் சொல்ல எங்களிடம் கூறுகிறார். இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்து இருந்தால் தமிழ்நாட்டில் நீட் விலக்கு நிறைவேறி இருக்கும்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி பாஜவுடன் கூட்டணி இருக்கு, இல்லை என மாற்றி மாற்றி பேசி வருகிறார். அவருக்கு இந்த மேடையில் இருந்து சவால் விடுகிறேன். எடப்பாடி பழனிசாமிக்கு தமிழக மாணவர்களின் மீது துளியாவது அக்கறை இருந்தால், பாஜவுடன் கூட்டணி செல்வதற்கு முன்பு நீட் விலக்கு அளித்தால்தான் கூட்டணியில் இணைவோம் என அவரால் வெளிப்படையாக அறிவிக்க முடியுமா?. நீட் விலக்கு வேண்டி உருப்படியாக ஒன்றும் செய்யாமல், வாய் சவடால் மட்டுமே செய்து வருவதால்தான் பழனிசாமி மக்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறார். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
* ‘பாஜவை தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பார்கள்’
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த ஆண்டு கொங்குநாடு கலைக்குழு சார்பில் 16 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற வள்ளிகும்மி நடன நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்தது. இதில், பங்கேற்ற 16 ஆயிரம் பெண்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் பாராட்டு விழா கோவை பீளமேடு கொடிசியா வளாகத்தில் நேற்று நடந்தது. கொமதேக மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அவரது முன்னிலையில், 10 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற வள்ளிகும்மி நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடந்தது. முன்னதாக, பெருந்துறை வள்ளிகும்மி நிகழ்ச்சி மூலம் கின்னஸ் சாதனை படைத்த பெண்கள் மற்றும் கலைக்குழு ஆசிரியர்கள் ஆகியோருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சான்றிதழ் வழங்கினார். பின்னர், கின்னஸ் சாதனையின் ஒரிஜினல் சான்றிதழை, கொங்குநாடு கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் கே.கே.சி.பாலசுப்பிரமணியத்திடம் வழங்கினார்.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பில் தமிழகம் பாதிக்கப்படாது, தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்ற உத்தரவாதத்தை பிரதமர் மோடி, தமிழக மண்ணில் அறிவிக்க வேண்டும் என நான் இன்று (நேற்று) காலை கோரிக்கை வைத்தேன்.
ஆனால், இன்று (நேற்று) ராமேஸ்வரம் வந்த பிரதமர் மோடி, அதுபற்றிய அறிவிப்பு எதுவும் வெளியிடாமல், தமிழக மக்களை புறக்கணிக்கும் வகையில் பேசியுள்ளார். அதனால், வருகிற 2026 சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, எந்த தேர்தலாக இருந்தாலும் சரி பாஜவை தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக புறக்கணிப்பார்கள். தமிழர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை நாம் பிரதமருக்கு நிரூபித்து காட்ட வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
* மக்களை நேரடியாக சந்தித்து மனுக்களை பெற்ற முதல்வர்
ஊட்டி அரசு கலைக்கல்லூரி மேடையில் பல்வேறு அரசு துறைகள் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மேடையில் உரையாற்றிய பின்னர், காருக்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் சற்றும் எதிர்பாராமல், விழா மேடையில் அமைக்கப்பட்டிருந்த நடைபாதை வழியாக மக்களை சந்திக்க சென்றார். அப்போது, அங்கு காத்திருந்த பொதுமக்கள் பலரும் தங்களது குறைகளை மனுக்களாக முதல்வரிடம் நேரடியாக வழங்கினர். மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்கள், பொதுமக்கள் என பலரும் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பலரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
* முதல்வருக்கு பழங்குடியினர் நன்றி
நீலகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையை திறந்து வைக்க முதல்வர் வந்தார். அப்போது மருத்துவமனை வளாகத்தில் தோடர், பனியர், குரும்பர் பழங்குடி மக்கள் தங்கள் பாரம்பரிய நடனமாடினர். இதனை முதல்வர் பார்த்து ரசித்தார். பின்னர், முதல்வரை சந்தித்த பழங்குடியின மக்கள், புதிய மருத்துவமனையில் பழங்குடியினருக்கு என 50 படுக்கை வசதிகளுடன் தனி வார்டு அமைத்து கொடுத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
The post நீட் விலக்கு அளித்தால்தான் பாஜவுடன் கூட்டணி என்று சொல்வாரா? எடப்பாடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சவால் appeared first on Dinakaran.