சென்னை: “மத்திய அரசு நமது நீட் தேர்வு விலக்கு கோரிக்கையை நிராகரித்தாலும், அத்தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் போராட்டம் ஓய்ந்து விடாமல் தொடரும். அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களுடன் ஒரு கலந்தாலோசனைக்கூட்டம் வரும் 9-ம் தேதி மாலை நடைபெறும்.” என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பேரவையில் முதல்வர் பேசியதாவது: மருத்துவப்படிப்பில் அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கும் முன்னுரிமையும், சமவாய்ப்பையும் உருவாக்கும் நுழைவுத்தேர்வு முறையை கருணாநிதி உருவாக்கினார். சமூக நீதியை நிலைநாட்டி, கிராமபுறங்களில் உள்ள எளிய மாணவர்களின் மருத்துவக்கனவை நினைவாக்கும் இந்த முறையால் தான் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும், மருத்துவர்கள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டது. இதன் பயனாக, மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சிறப்பான மருத்துவச் சேவையை வழங்கி வருகிறோம்.