புதுடெல்லி: நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் அதிகாரபூர்வ வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதுகுறித்து டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி (சிஐஜே) சஞ்சீவ் கண்ணாவிடம் அறிக்கை சமர்ப்பித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக உள் விசாரணையைத் தொடங்கிய நீதிபதி உபாத்யாய் பணம் கண்டுபிடிக்கப்பட்ட விவாகரம் தொடர்பான விசாரணையில் தான் சேகரித்த தகவல்கள் ஆதாரங்களை வெள்ளிக்கிழமை அளித்த தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவர், மார்ச் 20-ம் தேதி நடந்த உச்ச நீதிமன்ற கொலீஜிய கூட்டத்துக்கு முன்பாகவே விசாரணையைத் தொடங்கியிருந்தார். தற்போது உச்ச நீதிமன்ற கொலீஜியம் நீதிபதி உபாத்யாயின் அறிக்கையை ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை மேற்கொள்வதற்கான முடிவினை எடுக்கும்.