ஆறு, குளம் மற்றும் கோயில் குளங்களின் அருகே 500 மீட்டர் தொலைவிற்குள் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய தடை விதித்து கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது. ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் பொதுமக்கள் குளிப்பதற்கு பயன்படுத்தும் சோப்பு, ஷாம்பு உள்ளிட்ட பொருட்களால் நீர்நிலைகள் அசுத்தமடைவதுடன், அந்த நீரைக் குடிக்கும் கால்நடைகள் பாதிப்படைவது மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, கோயில் குளங்கள் மற்றும் ஆறுகளில் புனித நீராடுதல் என்ற பெயரில் குளித்துவிட்டு ஆடைகளை அங்கேயே விட்டுவிட்டுச் செல்லும் பழக்கத்தையும் கட்டுப்படுத்தும்படி அதிகாரிகளுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.