ஸ்ரீவைகுண்டம்: தூத்துக்குடி மாவட்ட மக்களின் முக்கிய நீராதாரமான வைகுண்டம் அணை மணல்மேடாக காட்சியளிக்கிறது. இதனை தூர்வார உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றின் கடைசி தடுப்பணையாக வைகுண்டம் அமைந்துள்ளது. இங்கிருந்து வடகால் மற்றும் தென்கால் வாய்க்கால்கள் வழியாக பாசன குளங்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் சாகுபடி வசதி பெறுகிறது. அணையின் உட்பகுதியில் 10க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்ட உறைகிணறுகள் அமைக்கப்பட்டு வறட்சியான பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான வைகுண்டம் அணை, கடந்த சில ஆண்டுகளாக சீமைக்கருவே மரங்களின் ஆக்கிரமிப்புகளாலும், மணல் குவியல்களாலும் தூர்ந்து போய் காட்சியளிக்கிறது. தற்போது பிசான சாகுபடிக்கு பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீரோடு, ஆங்காங்கே பெய்த மழையில் அடித்து வரப்பட்ட காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து வைகுண்டம் அணையில் இருந்து கடந்த சில நாட்களாக விநாடிக்கு 1500 கன அடி தண்ணீர் கடலுக்கு சென்றது.
கடந்த ஒரு வாரமாக மழை குறைந்துள்ள நிலையில், நீர்வரத்தும் சரிந்து அணையின் பெரும்பாலான பகுதிகள் மணல்மேடுகளாக காட்சியளிக்கிறது. 8 அடிக்கு தண்ணீரை சேமிக்கும் திறன் கொண்ட வைகுண்டம் அணை, அதிகாரிகளின் பாராமுகத்தால் 2 அடிக்கும் கூட தண்ணீர் சேமிக்க முடியாத அளவிற்கு காட்சியளிக்கிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர், அப்படியே வீணாக வெளியேறுவது ஆண்டாண்டு காலமாக தொடர்வதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
கடந்தாண்டு டிசம்பர் மாதம் பெய்த கனமழையின் போது தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வைகுண்டம் அணையில் ஏற்பட்ட சேதங்களை ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணியுடன் அணையை தூர்வார வேண்டுமென்ற விவசாயிகளின் கோரிக்கைக்கும் இதுவரை நீர்வளத்துறையினர் செவிசாய்க்கவில்லை. இதனால் கடந்த ஒரு வாரமாக காட்டாற்று வெள்ளமாக கரைபுரண்ட தாமிரபரணி தண்ணீர், கடலுக்கு சென்று வீணானதுதான் மிச்சம் என்று வேதனை தெரிவித்துள்ள விவசாயிகள், அணையின் கீழ் பகுதியில் பழுதான மதகுகளை சீரமைப்பதுடன், அணையை தூர்வாரினால்தான் நிரந்தர தீர்வு கிடைக்கும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணை சீரமைப்பு பணிகள் குறித்து நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி கூறுகையில், கடந்த டிசம்பர் மாதம் பெய்த மழை, வெள்ளத்தில் சேதமடைந்த ஸ்ரீவைகுண்டம் அணையில் தற்போது ஆற்றங்கரையில் வெள்ளத் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு உள்ளது. அணையின் அடித்தளத்தில் கற்கள் பெயர்ந்து இருந்த நிலையில் அதனை மறுபடியும் அணை பகுதியிலேயே அமைக்கும் பணி தற்காலிகமாக நடைபெற்று வருகிறது. அணையின் கீழ்பகுதியில் ‘‘வி’’ வடிவில் புதிதாக அமைக்கப்படும் கற்கள் வெள்ளத்தின் வேகத்தை தடுத்து அணையின் பாதுகாப்பு அரணாக இருக்கும். மழை காலத்திற்கு பிறகு அணை சீரமைப்புக்கு என தனி நிதி ஒதுக்கீடு செய்து முழுமையான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப் படும், என்றார்.
சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க எம்எல்ஏ கோரிக்கை
வைகுண்டம் அணையில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை நீர்வளத்துறை செயற்பொறியாளர் வசந்தி பார்வையிட்ட போது அவரை செல்போனில் தொடர்பு கொண்ட ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, அணை சீரமைப்பு பணிகளை விரைந்து முழுமையாக முடிக்க வேண்டும். சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் அதற்கான அனைத்து உதவிகளையும் செய்து தர தயாராக உள்ளேன். விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் நீராதாரமாக விளங்கும் வைகுண்டம் அணையை பாதுகாப்பது அவசியம் என்பதால் பணிகளை விரைந்து முடித்து தருமாறு கேட்டுக் கொண்டார்.
The post நீர் சேமிக்கும் திறன் குறைவதால் விவசாயிகள் கவலை; மணல்மேடாக காட்சியளிக்கும் ஸ்ரீவை. அணை: தூர்வார நடவடிக்கை எடுக்கப்படுமா? appeared first on Dinakaran.