சென்னை: தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது, அத்துடன் ஆந்திரப் பகுதிகளிலும் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் காரணமாக தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, நீலகிரி மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மற்றும் வட மேற்கு திசையில் இருந்து வீசிய காற்று காரணமாக தமிழகத்தில் கோவை மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி மற்றும் அதன் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்தது. இதற்கிடையே, வடக்கு கர்நாடகா-தெலங்கானா-ஆந்திரா பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. மேலும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளன.
இதன் காரணமாக தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. அதனால் அந்த மாவட்டத்துக்கு ரெட்அலர்ட் விடப்பட்டுள்ளது. சென்னையில், பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரியாக இருக்கும்.
இந்நிலையில், இன்றும் நாளையும் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும். 16, 17ம் தேதிகளில் தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகம் முதல் 65 கிமீ வேகத்தில் வீசும். மேலும் தென்மேற்கு வங்கக் கடலின் அனேக பகுதிகள், மத்திய வங்கக் கடலின் தெற்கு பகுதிகள், வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிமீ வேகத்தில் வீசும்.
அதனால் மேற்கண்ட பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் இன்று அதிகனமழை பெய்யும் வாய்ப்புள்ளதால் அந்த மாவட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
The post நீலகிரியில் இன்று அதி கனமழை பெய்யும்: ரெட் அலர்ட் எச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.