ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில், புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார். நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்தார்.
கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா, முதியோர், விதவை, கல்வி உதவி தொகை, வங்கி கடன், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 180 மனுக்களை பெற்றுக்கொண்டார்.
தொடர்ந்து, அவர் பேசுகையில், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று நடைபெறும்; மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது, சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், 11 பயனாளிகளுக்கு சீர்மரபினருக்கான அடையாள அட்டையையும், கோத்தகிரி வட்டம், அரக்கோடு கிராமத்தைச் சேர்ந்த திரு.சிவசங்கர் என்பவர் கடந்த 05.08.2020 அன்று தீ விபத்தில் உயிரிழந்ததற்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பெறப்பட்ட நிவாரணத்தொகை ரூ.1 லட்சத்தினை இறந்தவரின் தாய் மற்றும் மனைவிக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் காசோலையாக வழங்கினார்.
மேலும், கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த 03.03.2025 அன்று முதல் 23.03.2025 வரை 21 நாட்கள் நடைபெற்ற பேரிடர் மேலாண்மை தொடர்பான பயிற்சியில், நீலகிரி மாவட்டத்திலிருந்து கலந்து கொண்டு, பயிற்சியை பெற்று நிறைவு செய்த 5 ஆப்த மித்ரா தன்னார்வலர்களுக்கு சான்ழிதழ்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள இரண்டு நபர்களுக்கு ரூ.17 ஆயிரத்திற்கான காசோலை, மாற்றுத்திறனாளி ஒருவர் மளிகைக்கடை வைத்து, வியாபாரம் செய்வதற்காக ரூ.25 ஆயிரத்திற்கான காசோலை கலெக்டரின் விருப்புரிமை நிதியிலிருந்து வழங்கப்பட்டது. வட்டார போக்குவரத்து துறையின் சார்பில், மாவட்டத்தில் புதிய மினி பேருந்துகள் இயக்குவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.
கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சுரேஷ் கண்ணன், மாவட்ட வழங்கல் அலுவலர் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) கண்ணன், வட்டார போக்குவரத்து அலுவலர் ரவி, தேர்தல் வட்டாட்சியர் ஸ்ரீநிவாசன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post நீலகிரியில் புதிய வழித்தடங்களில் மினி பேருந்துகள் இயக்குவதற்கு ஆணைகளை கலெக்டர் வழங்கல் appeared first on Dinakaran.