ஊட்டி: நீலகிரியில் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் ஊட்டி தலைகுந்தா அருகே அத்திக்கல் கிராமத்திற்கு செல்லும் சாலையோரம் உள்ள வனப்பகுதியில் புலி ஒன்று ஓய்வெடுத்தது. இதனை அவ்வழியாக வாகனத்தில் சென்ற சிலர் செல்போனில் பதிவு செய்துள்ளனர். சிறிது நேரம் அமர்ந்திருந்த புலி எவ்வித சலனமுமின்றி அருகில் உள்ள வனத்திற்குள் சென்று மறைந்தது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புலி நடமாட்டம் தொடர்பாக வனத்துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர். இதனால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பீதியில் உள்ளனர்.
இதேபோன்று நேற்று முன்தினம் இரவு கோத்தகிரி நகரில் இரும்பு கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாயை சிறுத்தை வேட்டையாட முயன்றது. இரும்பு கூண்டு மற்றும் நாய் தொடர்ந்து குரைத்ததால் சிறுத்தை திரும்பிச்சென்றது. இதன் வீடியோவும் வைரலானது.
சிறுத்தை உயிரிழப்பு: நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே தனியார் தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கூடலூர் வனக்கோட்டம் தேவாலா வனச்சரகம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். சிறுத்தை உடலில் பல இடங்களில் காயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மற்ற விலங்குடன் ஏற்பட்ட மோதலில் இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. முதுமலை புலிகள் காப்பக வன உயிரின கால்நடை மருத்துவர் ராஜேஷ்குமார் சிறுத்தையின் உடற்கூராய்வு செய்து உடல் உறுப்புகள் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். அதன்பின், சிறுத்தை இறப்பு குறித்து தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
The post நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம்: பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.