உதகை: வரையாடு சினையாக இருந்தது தெரியாமல், மயக்க ஊசி செலுத்தப்பட்டதால் இறந்ததா? என வனவிலங்கு ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ்நாடு மாநில விலங்கான வரையாடு, அழிந்து வரும் உயிரினமாக இயற்கை பாதுகாப்புக்கான பன்னாட்டு ஒன்றியத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
வரையாடு இனத்தைப் பாதுகாக்கவும், அதன் வாழ்விடங்களை மேம்படுத்தவும் நாட்டிலேயே முதல்முறையாக நீலகிரி வரையாடு திட்டத்தை ரூ.25.14 கோடி மதிப்பில் செயல்படுத்த தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதன்படி ஆண்டுக்கு இருமுறை ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு, டெலிமெட்ரிக் ரேடியோ காலரிங் பொருத்தி தொடர்ந்து பாதுகாத்தல், நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல் மற்றும் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 7-ம் தேதியை ‘வரையாடு தினம்’ என அனுசரித்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வரையாடுகளுக்கு புதிதாக ரேடியோ காலர் கருவி பொருத்தி, அவற்றின் வாழ்வியல் சூழல்கள் குறித்த விவரங்களை சேகரிக்க வனத்துறையினர் திட்டமிட்டனர்.