ஊட்டி : நீலகிரியில் திருட்டு போன மற்றும் தவறவிட்ட ரூ.20 லட்சம் மதிப்புடைய 128 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்போன்களை தவற விட்டவர்கள், திருட்டு போனது தொடர்பாக செல்போன் பறி கொடுத்தவர்கள் அந்தந்த காவல் நிலையங்களில்புகார் அளித்தனர்.
ஊட்டியில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலைய உதவியுடன் செல்போன்கள் மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்புகாரின் பேரில் செல்போன் ஐஎம்இஐ எண்ணை கொண்டு உயர்ரக செல்போன்கள் மீட்கப்பட்டன. இவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று ஊட்டியில் உள்ள சிறுவர் மன்றத்தில் நடந்தது. கூடுதல் எஸ்பி., மணிகண்டன் தலைமை வகித்தார். மாவட்ட எஸ்பி நிஷா பங்கேற்று செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
இதைத்தொடர்ந்து, எஸ்பி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘மாவட்டம் முழுவதும் பஸ் நிலையங்கள் நிலையங்கள் மற்றும் திருவிழாக்களில் அதிகமான செல்போன்கள் காணாமல் போனது, தவற விட்டதாக பொதுமக்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் செல்போன்களை மீட்க போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். இதில் 128க்கும் மேற்பட்ட காணாமல் போன செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் அனைவரும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பஸ் நிலையங்கள், திருவிழாக்களுக்கு செல்லும் பொழுது செல்போன் நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கவனத்துடன் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதேபோல் விலை உயர்ந்த பொருட்கள் காணாமல் போனால் தாமதிக்காமல் உடனே காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும்.
காலதாமதம் ஏற்பட்டால் அந்த பொருட்களை கண்டுபிடித்து தருவதில் சிக்கல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்’’ என்றார். இந்நிகழ்ச்சியில் காவல்துறை உயரதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
The post நீலகிரி மாவட்டத்தில் காணாமல் போன ரூ.20 லட்சம் மதிப்புடைய 128 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு appeared first on Dinakaran.