திருவனந்தப்புரம்: கேரள மாநிலம் திருவனந்தப்புரத்தில் இன்று (21-02-2025) பல்கலைக்கழக மானியக்குழுவின் வரைவு நெறிமுறைகள் 2025, குறித்த தேசிய மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் கலந்துகொண்டார்.
இம்மாநாட்டில் உயர்கல்வித்துறை அமைச்சர் பேசியதாவது:-
UGC நெறிமுறைகள் குறித்த இந்த முக்கியமான மாநாட்டில் தமிழ்நாடு மாநிலத்தின் பிரதிநிதியாக கருத்துகளை எடுத்துரைப்பதில் நான் பெருமை கொள்கிறேன். கல்வி, சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் தமிழ்நாடு எப்பொழுதும் முன்னணியில் உள்ளது. கல்வியானது மாணவர்களுக்கு நன்மை பயக்கும் மற்றும் அவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாப் பணியாளர்களின் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான குறைந்தபட்சத் தகுதிகளாக வெளியிடப்பட்டுள்ள இந்த சமீபத்திய வரைவு நெறிமுறைகள் வருங்காலத்தில் மாநிலத்தின் சுயாட்சியினை முழுவதுமாக பறிக்கும் வகையில் உள்ளது.
ஒன்றிய-மாநில உறவுகளில் மாநில அரசின் உரிமைகளில் கடுமையான தாக்குதலை ஏற்படுத்துகிறது. UGC சட்டம், 1956-இன் பிரிவு 26-இன் கீழ், உருவாக்கப்பட்ட பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளிட்ட இந்த நெறிமுறைகள் மாநிலப் பல்கலைக்கழகச் சட்டங்களை செயல்பாடற்றதாக ஆக்கும் நோக்கம் கொண்டது. வரைவு UGC நெறிமுறைகள் ஒரு வழிமுறைகளே ஆகும்.
வரைவு UGC விதிமுறைகளை அமல்படுத்தும் முயற்சி UGC-யின் அத்துமீறலைத் தவிர வேறில்லை. சட்டப் பிரிவு 12(d)-இன் கீழ், UGC-இன் அதிகாரங்கள் வெறும் பரிந்துரை மட்டுமே. UGC உயர்கல்வியில் தரநிலைகள் குறித்து ஆலோசனை கூறலாம். ஆனால், அது மாநிலங்களை கட்டாயப்படுத்தி அமுல்படுத்த முடியாது. இந்த வரைவு விதிமுறைகள், அதிகாரப் பிரிவினை மற்றும் கூட்டாட்சி முறை ஆகிய இரண்டும் அரசியலமைப்பின் ‘அடிப்படை அம்சங்களாக’ இருப்பதை சீரழிப்பதற்கான ஒரு முயற்சி. கல்வி நமது அரசியலமைப்புச் சட்டத்தின் ஒருங்கிணைந்த பட்டியலில் உள்ளது.
இந்த UGC வரைவு விதிமுறைகள் போன்ற ஒரு குழுவால் பரிந்துரைக்கப்பட்ட நெறிமுறைகள் மாநில சட்டங்களுக்கு மேலோங்காது. இந்த UGC வரைவு நெறிமுறைகள் பல்கலைக்கழகங்களில் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு உண்மையான முயற்சியாக இல்லை. இந்த விதிமுறைகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல், பிரதிநிதித்துவ சட்டத்தின் போர்வையில் தள்ளப்படுகின்றன. மாண்பமை உச்சநீதிமன்றத்தில் கல்யாணி மதிவாணன் என்பவருக்கு எதிராக கே.வி. ஜெயராஜ் தொடர்ந்த வழக்கில், UGC விதிமுறைகளை அரசு ஏற்காத பட்சத்தில் மாநிலப் பல்கலைக்கழகங்கள் கட்டாயம் இதனை பின்பற்ற வேண்டும் என்பதில்லை என்று தீர்ப்பளித்தது.
எனவே, விதிமுறைகளை வகுப்பதில் ஒவ்வொரு கட்டத்திலும் மாநிலங்களின் சம்மதம் மற்றும் ஆலோசனை பெறுவது அவசியம். இந்த விதிகளுக்குப் பின்னால் தெளிவான அறிவியல் காரணம் இல்லை. எந்த ஆய்வுக் கண்டுபிடிப்புகளும் இல்லை. பல்கலைக்கழக நிதிநல்கைக் குழு ஏதேனும் நிபுணர்களை கலந்தாலோசித்ததா அல்லது மாணவர்கள் மற்றும் நிர்வாகிகள் எழுப்பிய உண்மையான சந்தேகங்களை நிவர்த்தி செய்ததா என்பதும் தெளிவாக இல்லை. UGC மற்றும் தேசியக் கல்விக் கொள்கை (NEP) ஆகியவற்றின் வழிகாட்டுதல்கள், நமது நாட்டிற்கு அதன் பொருத்தம் மற்றும் பயனைப் பற்றி எந்த சிந்தனையையும் பயன்படுத்தாமல் மேற்கத்தியத்தை நகலெடுப்பதாகத் தெரிகிறது. இந்த வரைவு விதிமுறைகள், கல்வித் தரம் குறித்த மேலோட்டமான கருத்தை முன்மொழிகிறது. எந்த விதமான தேவை மதிப்பீடு அல்லது அறிவியல் அடிப்படையின்றி ஏற்கனவே நிறுவப்பட்ட நடைமுறைகளை சிதைக்கும் முயற்சியாகும்.
உயர்கல்வியில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக உள்ளது. சமீபத்திய பட்ஜெட்டில், தமிழ்நாடு ரூ.8,212 கோடிகளை ஒதுக்கியது. இது ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒன்றிய அரசின் மொத்த ஒதுக்கீட்டில் 17% ஆகும். மாநில அரசுகளின் முறையான ஆலோசனை இல்லாமல் கல்வி முறையில் புதிதாக விதிகளை சுமத்துவது நியாயமற்றது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது. தமிழ்நாட்டில் உள்ள பொதுப் பல்கலைக்கழகங்கள் மாநில சட்டமன்றச் சட்டங்கள் மூலம் உருவாக்கப்பட்டு, அரசின் நிதியுதவியுடன் சம வாய்ப்புகள் மற்றும் இடஒதுக்கீடு உள்ளடக்கிய சமூக நீதியுடன் செயல்பட்டு வருகின்றன.
துணைவேந்தர்களுக்கான தேடல் மற்றும் தேர்வுக் குழுக்களில் இருந்து மாநில அரசு முற்றிலும் ஒதுக்கப்படுவதை தமிழ்நாடு எதிர்க்கிறது. மாநில அரசின் உறுப்பினர் இன்றி துணைவேந்தர் நியமனம் செய்வது பல்கலைக்கழக நிர்வாகத்தில் மாநில சுயாட்சியை சிதைக்கும் முயற்சியாகும். மாநில சட்டப் பேரவையின் சட்டத்தின் மூலம் மாநில அரசுப் பல்கலைக்கழகங்களை நிறுவியுள்ளது. எனவே, மாநிலப் பல்கலைக்கழகங்களின் மீது மாநில அரசுக்கு முதல் உரிமை உள்ளது மற்றும் துணைவேந்தர்களுக்கான தேடல் குழுவை அமைப்பதற்கான சட்டப்பூர்வ உரிமையை மாநில அரசு பெற்றிருக்க வேண்டும்.
கல்வியியலாளர்கள் அல்லாதவர்களை துணைவேந்தர்களாக நியமிக்கும் விதிகள் வணிக நோக்கம் கொண்டதாக மாற்றிவிடும். பல்கலைக்கழகங்களுக்கு கல்வியாளர்கள் மற்றும் நிர்வாகம் இரண்டையும் புரிந்து கொள்ளும் தலைவர்கள் தேவை. வணிகத்தில் மட்டும் கவனம் செலுத்தும் நபர்கள் அல்ல. இந்த விதிமுறைகளை அமல்படுத்துவது கல்வியை வெறும் வியாபாரமாக மாற்றி அதன் தரத்தை சீரழித்துவிடும். மாறுபட்ட பாடப்பிரிவில் ஆசிரியர்கள் நியமனம், இளங்கலை அல்லது முதுகலை தகுதியிலிருந்து வேறுபட்ட ஒரு பாடத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் அல்லது அவர் பெற்ற அடிப்படை பட்ட பிரிவிலிருந்து வேறுபட்ட பாடத்தில் NET/SET தேர்வில் தேர்ச்சி பெற்றவர் இந்த தேர்வுகள் மூலம் எந்த பாடத்தில் தேர்ச்சி பெறுகிறாரோ அவர் அந்த பாடத்திற்கு ஆசிரியராகலாம் என்பது, தொடர்பில்லாத பாடங்களை கற்பிக்க ஆசிரியர்களை அனுமதிப்பது மாணவர்களின் கற்றல் விளைவுகளுக்கு எதிர்மறையாக அமைந்துவிடும்.
திறமையான அறிவு பரிமாற்றத்திற்கு ஆசிரியர்கள் தாங்கள் கற்பிக்கும் பாடங்களில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும். பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் மீது நியாயமற்ற சுமையை ஏற்படுத்தும் பொது நுழைவுத் தேர்வுகளை தமிழ்நாடு எப்போதும் எதிர்க்கிறது. உயர்கல்வியில் 47% என்ற மொத்த மாணவர் சேர்க்கை விகிதம் (GER) தமிழ்நாட்டின் கல்விக் கொள்கைகளின் வெற்றியைக் காட்டுகிறது. இளங்கலை மற்றும் முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுகள் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தைப் பாதிக்கும். குடும்பங்களுக்கு நிதி நெருக்கடியை அதிகரிக்கும் மற்றும் பயிற்சி நிலையங்களை அதிகரிப்பதை ஊக்குவிக்கிறது.
தற்போது மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (CBSE) உட்பட அனைத்து பள்ளி வாரியங்களும் ஏற்கனவே பல தேர்வுகள் மற்றும் பொது தேர்வுகள் மூலம் மாணவர்களை மதிப்பீடு செய்கின்றன. அதிக போட்டி நிறைந்த நுழைவுத் தேர்வுகள். தற்போதுள்ள தேர்வுகளை அர்த்தமற்றதாக்கி. மாணவர்களுக்கு மனச்சுமையை ஏற்படுத்தும். இது நியாயமற்றது மற்றும் கற்றல் விளைவுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.
ஆண்டுக்கு இருமுறை சேர்க்கை மற்றும் LIGU நுழைவு மற்றும் பல வெளியேறுதல் (Multiple Entry and Multiple Exist (MEME)) கல்வி முறையை சீர்குலைக்கும் சீர்குலைக்கும். இந்த சேர்க்கைகள் கட்டமைப்பு சவால்களை உருவாக்குகின்றன. MEME இடைநிற்றல்களை ஊக்குவிக்கிறது. இது உயர்கல்வி மாணவர் சேர்க்கையை அதிகரிப்பதற்கும் மாணவர்களை தக்கவைப்பதை மேம்படுத்துவதற்கும் மேற்கொண்டுள்ள நமது மாநிலத்தின் முயற்சிகளுக்கு எதிரானது. இந்த விதிகளைப் பின்பற்றப்படவில்லையெனில் பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் செல்லாது என்பதும் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை இரத்து செய்வோம் என்பதும் ஜனநாயக விரோதமானவை.
மாநில அரசுகளுக்கு எதிரான இந்த நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், ஜனநாயக முறையில் உயர்கல்வியை உருவாக்க மாநிலங்களுடன் இணைந்து செயல்படுமாறும் ஒன்றிய அரசை தமிழ்நாடு வலியுறுத்துகிறது. மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் உரிமைகளுக்காக தமிழ்நாடு தொடர்ந்து போராடும். இந்த நெறிமுறைகள் வெளியிட்டவுடன் இதன் பாதிப்புகளை உணர்ந்த தமிழ்நாட்டின் முதலமைச்சர் உடனடியாக இதனைத் திரும்பப் பெறவேண்டும் என்று ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதி வலியுறுத்தியதுடன் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையிலும் தனித் தீர்மானமாகக் கொண்டு வந்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானத்தை நிறைவேற்றிக் காட்டினார்.
அதுமட்டுமல்லாமல், ஒத்த கருத்துடைய மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கும் இதுகுறித்து கடிதம் எழுதினார். கேரள மாநில முதலமைச்சரும் இந்த நெறிமுறைகளின் தாக்கத்தை அறிந்து உடனடியாக ஒன்றிய கல்வி அமைச்சருக்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியதுடன் சட்டமன்றத்திலும் தனித்தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள். இதற்கு தமிழ்நாட்டின் சார்பில் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நெறிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என்பதனை வலியுறுத்தி கடந்த 05.02.2025 அன்று பெங்களூருவில் ஒத்த கருத்துள்ள மாநிலங்களின் உயர்கல்வி அமைச்சர்களின் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்று நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்துள்ளோம்.
இந்த நெறிமுறைகளுக்கு அடிப்படையான தேசிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தவில்லையெனில் கல்விக்காக மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியினை வழங்க இயலாது என ஒன்றிய அமைச்சர் தெரிவித்திருப்பது அகம்பாவத்தின் (arrogance) உச்சம், புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கையின் மூலம் இந்துத்துவாவை புகுத்துகிறது. இந்தியையும், சமஸ்கிருதத்தையும் இதன் மூலம் திணிக்க ஒன்றிய அரசு நிர்பந்திக்கிறது. இருமொழிக் கொள்கை கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டின் “இல்லம் தேடிக் கல்வித் திட்டம்” நல்ல பலனைப் தந்திருப்பதை சுட்டிக்காட்டி பாராட்டப்பட்டிருக்கிறது. இதனை பாராட்டி தமிழ்நாட்டிற்கு ஊக்கம் தருவதற்கு பதிலாக நிதி ஒதுக்காமல் மிரட்டுவது போன்ற அடாவடி செயலில் தொடர்ந்து ஒன்றிய அரசு ஈடுபட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டிற்கு நிதி கிடையாது என்று Blackmail செயவதை தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம். உங்கள் தனிச் சொத்தை கேட்பதுபோல் திமிராக பேசினால் தமிழர்களின் தனிக் குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டி இருக்கும் என தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எச்சரித்துள்ளார்.
நமது கல்வி அமைப்பில் சமூக நீதியின் அடித்தளத்தைப் பாதுகாப்பதற்கும். கல்வி அதிகாரமளிப்பதற்கான ஒரு கருவியாக இருப்பதை உறுதி செய்வதற்கும் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என கூறினார்.
The post நுழைவுத்தேர்வு மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும் மற்றும் மாநில சுயாட்சியை பாதிக்கும்: அமைச்சர் கோவி. செழியன் appeared first on Dinakaran.