சென்னையை அடுத்த கவரைப்பேட்டை ஆர்எம்கே பள்ளியில் 30-வது தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் நடைபெற்றது. 27 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் தமிழகம், அசாம் அணியை எதிர்த்து விளையாடியது. இதில் தமிழக அணி 17-14 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. தமிழக அணி தரப்பில் ரம்யா 10 கோல்கள் போட்டார். 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கேரளா 24-22 என்ற கணக்கில் ஹரியானாவை வீழ்த்தியது.
சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு ஆர்எம்கே கல்விக்குழுமங்களின் தலைவர் ஆர்.எஸ்.முனிரத்தினம் பரிசு கோப்பையை வழங்கினார். நிகழ்ச்சியில் இந்திய நெட்பால் சம்மேளத்தின் தலைவர் சுமன் கவுசிக், பொதுச்செயலாளர் விஜேந்தர் சிங், ஆர்எம்கே கல்விக்குழுமங்களின் துணைத்தலைவர்கள் ஆர்.எம்.கிஷோர், துர்காதேவி பிரதீப், செயலாளர் யலமஞ்சி பிரதீப், தமிழ்நாடு நெட்பால் சங்கத்தின் தலைவர் பி.செல்வராசு, ஆர்எம்கே உண்டு உறைவிட பள்ளி முதல்வர் ஷப்னா சங்க்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 30-வது தேசிய சப் ஜூனியர் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற தமிழக அணிக்கு பரிசு கோப்பை வழங்கப்பட்டது.