*பயணிகள் அலறியடித்து ஓட்டம்
நெல்லை : தென்கலம்புதூரில் இருந்து நெல்லை சந்திப்புக்கு இயக்கப்பட்ட அரசு பஸ், நேற்று கட்டுப்பாட்டை மீறி புதருக்குள் பாய்ந்ததில், 6 பேர் சிறுகாயங்களுடன் தப்பினர். பயணிகள் பஸ் டிரைவருடன் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நெல்லையில் இருந்து தென்கலம்புதூருக்கு தாழையூத்து வழியாக தினமும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கிராமப்புற பகுதிகள் வழியே செல்லும் இந்த பஸ்சில் எப்போதும் நல்ல கூட்டம் காணப்படும். நேற்று காலை 10 மணியளவில் தென்கலம்புதூரில் இருந்து புறப்பட்ட அரசு பஸ் தாழையூத்து வரும் முன்பு, ஒரு திருப்பத்தில் கட்டுப்பாட்டை இழந்து காட்டு பகுதிக்குள் இறங்கியது. அப்பகுதியில் காணப்பட்ட முட்கள் அடர்ந்த ஒரு புதருக்குள் அரசு பஸ் இறங்கி நின்றது.
பஸ் தறி கெட்டு ஓடியதை கண்டு, பஸ்சில் இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். சிலர் டிரைவர்கள், அரசு பஸ்சை அலட்சியமாக ஓட்டியதாக கூறி அவரிடம் சென்று வாக்குவாதம் செய்தனர். இரு தினங்களுக்கு முன்பு இதேபோன்று இதே சாலையில் அரசு பஸ், இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை இடித்து பிரச்னை ஏற்பட்டதாகவும் பயணிகள் புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து தாழையூத்து போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.இந்த விபத்தில் 6 பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது. அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்று முதலுதவி சிகிச்சை பெற்று கொண்டு சென்றனர். அரசு பஸ் புதருக்குள் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து செல்போனில் பேசிக்கொண்டு பஸ்சை இயக்கியதாக வந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் டிரைவர் கணேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
The post நெல்லைக்கு வந்த அரசு பஸ் புதருக்குள் பாய்ந்தது appeared first on Dinakaran.