*போலீஸ் விசாரணையில் உருக்கமான தகவல்
நெல்லை : சுரண்டை அருகே சாம்பவர்வடகரையில் பிரிந்த குடும்பத்தை ஒன்று சேர்க்க சகோதரிகள் இருவரும் தற்கொலை செய்து கொண்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
தென்காசி மாவட்டம், சுரண்டை அருகேயுள்ள சாம்பவர்வடகரையைச் சேர்ந்த வைத்தியலிங்கம். இவரது மனைவி சரோஜா (61). இவர்களுக்கு முருகேஸ்வரி என ஒரு மகள். இதேபோல் பரமசிவன்- இந்திரா (49) தம்பதியருக்கு பாஸ்கர் (27) என்ற மகனும், பவித்ரா (24) என்ற மகளும் உள்ளனர்.
வைத்திலிங்கமும், பாஸ்கரும் சகோதரர்கள் ஆவர். இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்ட சரோஜா, இந்திரா ஆகியோரும் சகோதரிகள் ஆவர்.
இவர்கள் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களது குழந்தைகளுக்கு திருமணம் ஆனதை தொடர்ந்து சொத்து தொடர்பான பிரச்னை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இரட்டை குளம் செல்லும் வழியில் அவர்களுக்கு சொந்தமான கிணற்றில் சகோதரிகள் இருவர் உடல் மிதப்பதாக சாம்பவர்வடகரை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் விரைந்துசென்ற போலீசார் சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) பாலச்சந்தர் வீரர்கள் பாலகிருஷ்ணன்,சாமி, சரவணன் விவேகானந்தர் ஆகியோர் உதவியுடன் இருவரது உடல்களையும் லையும் மீட்டனர்.
இதைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த சாம்பவர்வடகரை போலீசார் இருவர் டலையும் தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இது கொலையா?தற்கொலையா என விசாரணை நடத்தி வந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மற்றும் காவல்துறையினர் கூறியதாவது இரண்டு குடும்பங்களுக்கும் பல ஆண்டுகளாக கூட்டு குடும்பங்களாக வசித்து வந்துள்ளனர்.
சில ஆண்டுகளாக சொத்து சம்பந்தமாக இரண்டு குடும்பங்களுக்கும் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இருந்தபோதிலும் அக்கா தங்கை இருவரும் மிகவும் பாசமாக பழகி வந்துள்ளனர். பிரியக்கூடாது என்பதற்காகவே அக்கா,தங்கை இருவரும் ஒரே குடும்பத்தில் வாக்கப்பட்டு ஒற்றுமையாக இருந்து வந்துள்ளனர்.இத்தனை ஆண்டுகள் ஒன்றாக இருந்த குடும்பம் தற்போது சொத்து பிரச்னைக்காக இரண்டு குடும்பமும் பிரிந்ததை சகோதரிகள் மனம் ஏற்றுக்கொள்ளவில்லை.
ஒற்றுமையாக இருந்த நீங்கள் இன்று சொத்து பிரச்னைக்காக இப்படி உள்ளீர்களே என சிலர் கேட்டுள்ளனர்.இதனால் கடந்த சில நாட்களாக சகோதரிகள் இருவரும் மிகவும் மன வேதனையில் இருந்ததாக கூறப்படுகிறது.
தமது இறப்பிலாவது குடும்பத்தினர் மீண்டும் ஒன்று சேர்வார்கள் என்ற நம்பிக்கையில் இருவரும் பேசிக் கொண்டதாக தெரிகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை 9 மணி முதல் இருவரையும் காணவில்லை என்று இருவரது குடும்பத்தினரும் தேடி வந்துள்ளனர்.
அப்போது ஊருக்கு தெற்கே அவர்களுக்கு சொந்தமான கிணற்றில் விழுந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.இந்த காலத்தில் தங்களது குடும்பம் இணை வேண்டுமென்ற சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post நெல்லை அருகே பிரிந்த குடும்பத்தை ஒன்றுசேர்க்க தற்கொலை செய்த இரு சகோதரிகள் appeared first on Dinakaran.