*போலீஸ் கமிஷனர் அதிரடி
நெல்லை : நெல்லை மாநகரத்தில் விபத்துக்களை தடுப்பதற்காக 25 சோலார் வண்ண மின்விளக்குகள் பேட்டை, டவுன், நெல்லை சந்திப்பு, பாளை உட்பட பல்வேறு பகுதிகளில் போலீஸ் கமிஷனர் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீசார் சாலைகளின் நடுவிலுள்ள தடுப்புகளில் பொருத்தி வருகின்றனர்.
நெல்லை மாநகர் முழுவதும் போலீசார், சாலைகளில் இரவு மற்றும் பகல் நேரங்களில் விபத்துக்கள் ஏற்படாமல் இருப்பதற்காகவும், பாதுகாப்பிற்காகவும் சாலைகளின் நடுவிலுள்ள தடுப்புகள் மற்றும் திரும்பும் பாதைகளில் சிகப்பு, ஊதா வண்ணங்களில் சோலார் மின் விளக்குகள் வைத்துள்ளனர்.
நெல்லை மாநகரத்தில் கடந்தாண்டு 42 பேர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக நெல்லை மாநகர விபத்து தடுப்பு பிரிவு (புலனாய்வு பிரிவு) காவல் நிலையத்தில் சுமார் 160 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுபோன்று நெல்லை மாநகரத்தில் நடப்பாண்டில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையில் விபத்துக்களில் சுமார் 7 பேர் இறந்துள்ளனர்.
மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக நெல்லை மாநகர விபத்து தடுப்பு பிரிவு காவல் நிலையத்தில் சுமார் 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் பகல் நேரங்களை காட்டிலும் இரவு நேரங்களில் அதிகளவில் விபத்து நடந்து வருவது குறித்து போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி விபத்துக்களை குறைப்பதற்கு திட்டமிட்டனர்.இதனையடுத்து சென்னையிலிருந்து நெல்லை மாநகரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு கடந்தாண்டு வந்த சோலார் மின் விளக்குகளை பயன்படுத்துவது என உயரதிகாரிகள் முடிவெடுத்தனர்.
நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாடிமணி உத்தரவின் பேரில் நெல்லை மாநகர போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் கடந்த சில நாட்களாக நெல்லை சந்திப்பு அண்ணா சிலை, கொக்கிரகுளம் ரவுண்டானா முக்கு, வண்ணார்பேட்டை, பாளை முருகன்குறிச்சி, பாளை பஸ் நிலையம், டவுன் காட்சி மண்டபம் உட்பட சுமார் 25 இடங்களில் இந்த புதிய சோலார் வண்ண மின் விளக்குகள் பேரி கார்டுகள் மற்றும் சாலைகளில் நடுவிலுள்ள தடுப்புகளில் பொருத்தப்பட்டது.
மேலும் இந்த விளக்குகள் பொருத்தப்படாத இடங்களில் விரைவில் பொருத்தப்படும் என போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார். இந்த சோலார் மின் விளக்குகள் வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
The post நெல்லை மாநகரத்தில் விபத்துக்களை தடுக்க சிகப்பு, ஊதா வண்ண சோலார் மின்விளக்குகள் appeared first on Dinakaran.