ரம்ஜான் நோன்பு நாட்களில் தெலங்கானா மாநிலத்தில் தனியார் மற்றும் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் முஸ்லிம்கள் ஒரு மணி நேரம் முன்னதாக, அதாவது மாலை 4 மணிக்கே வீடுகளுக்கு செல்லாம் என தெலங்கானா அரசு புதிய அரசாணையை பிறப்பித்துள்ளது. இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ரேவந்த் ரெட்டி தலைமையிலான தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசு தரப்பில் நேற்று அம்மாநில தலைமை செயலாளர் சாந்திகுமாரி புதிய அரசாணையை வெளியிட்டுள்ளார். அதாவது, ரம்ஜான் நோன்பு வரும் மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. இது மார்ச் மாதம் 31-ம் தேதி வரை நீடிக்கிறது. இந்த நாட்களில் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் நோன்பு இருப்பதால், அரசு, தனியார், கார்பரேஷன் அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் முஸ்லீம்கள் மாலை 5 மணிக்கு பதிலாக ஒருமணி நேரம் முன்னதாக, அதாவது மாலை 4 மணிக்கே தொழுகை செய்ய வீட்டிற்கு செல்ல இந்த அரசு சிறப்பு அனுமதி வழங்குகிறது.எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள், உயர் பதவியில் இருப்பவர்கள் இதனை கடைபிடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.