அதிமுக-வை கைவிட்டாலும் டி.டி.வி.தினகரனை பாஜக தலைவர் அண்ணாமலை அத்தனை எளிதில் கைவிட மாட்டார் போலிருக்கிறது. இருவருக்கும் இடையிலான நட்பு அப்படி இருக்கிறது. இந்தச் சூழலில், எங்கு சுற்றினாலும் அதிமுக, பாஜக கூட்டணிக்குத்தான் வரும் என்ற நம்பிக்கையில் அண்ணாமலையே ஜெயம் என தெம்போடு இருக்கிறார் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். அவரது கட்சியினரோ தினகரன் போட்டியிடப் போகும் தொகுதியை முதற்கொண்டு அடையாளம் குறித்து வைத்துவிட்டார்கள்.
ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் அதிசய வெற்றியை பெற்றாலும் தினகரனுக்கு முதன் முதலில் தேர்தல் களத்தை அமைத்துக் கொடுத்த மாவட்டம் தேனி தான். 1999 மக்களவைத் தேர்தலில் முதன் முதலில் பெரியகுளம் (இப்போது தேனி) மக்களவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக நின்ற தினகரன், சுமார் 55 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.