மும்பை: சர்வதேச போக்குகள் உள்ளிட்ட காரணங்களால், இந்திய பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. சென்செக்ஸ் 1,049 புள்ளிகள் சரிந்தன. இன்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக இன்றும் (ஜன.3) சரிந்தன. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகம் நிறைவடைந்தபோது, சென்செக்ஸ் 1,049 புள்ளிகள் (-1.36%) சரிந்து 76,330-ல் நிலை கொண்டிருந்தது. இதனிடையே, தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 345 புள்ளிகள் (-1.47%) சரிந்து 23,085-ல் நிலை கொண்டிருந்தது. பெரும்பாலான நிறுவன பங்குகளும் வீழ்ச்சி கண்டிருந்தன. குறிப்பாக, ரியல் எஸ்டேட் துறை 6.5% சரிந்தது. டிரென்ட், பாரத் பெட்ரோலியம், அதானி போர்ட்ஸ் பங்குகள் அதிக சரிவை சந்தித்தன. நடுத்தர மற்றும் சிறிய நிறுவன குறியீட்டெண் 4 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. இந்த சரிவால் முதலீட்டாளருக்கு ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.