பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பின் விதிமுறைகளை மீறியது மற்றும் பெரிய அளவில் நிதி மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக ஊடக நிருபர் சபன் ஸ்ரீவத்ஸவா தொடர்ந்த வழக்கு ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.இ. பங்கர் அமர்வு முன்பு கடந்த சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முதல்கட்ட ஆதாரங்கள் இருப்பதாக கூறி செபி முன்னாள் தலைவர் மாதவி புரி புச் மற்றும் 5 அதிகாரிகளுக்கு எதிராக எப்ஐஆர் பதிவு செய்து விசாரணை நடத்த ஊழல் தடுப்பு பிரிவுக்கு சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இந்த விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் 30 நாட்களுக்குள் நிலை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், மாதவி, பிஎஸ்இ நிர்வாக இயக்குநர் சுந்தரராமன் ராமமூர்த்தி உள்ளிட்டோர் சிறப்பு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.