மும்பை: பங்குச் சந்தை மோசடி தொடர்பான எஃப்ஐஆர் உத்தரவை எதிர்த்து செபியின் முன்னாள் தலைவர் மாதவி புரி புச், பிஎஸ்இ நிர்வாக இயக்குநர் சுந்தரராமன் ராமமூர்த்தி உள்ளிட்ட 6 பேர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
பங்குச் சந்தை விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி சசிகாந்த் ஏக்நாத்ராவ் பங்கர், தவறு நடந்திருப்பது முதல்கட்ட ஆதாரங்களில் தெளிவாக தெரிகிறது. எனவே, மாதவி புரி புச், 5 அதிகாரிகளுக்கு எதிராக ஊழல் தடுப்பு அமைப்பு (ஏசிபி) முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். இந்த விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்கும். 30 நாட்களுக்குள் ஏசிபி தனது நிலை அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என கடந்த சனிக்கிழமை உத்தரவிட்டார்.