மும்பை: மும்பை கடற்கரை பகுதியில் சுற்றுலா படகு மீது, கடற்படையின் அதிவேக ரோந்து படகு ஒன்று மோதியதில் 13 பேர் உயிரிழந்த விபத்தின் எதிரொலியாக கேட்வே ஆஃப் இந்தியாவில் இருந்து படகில் சவாரி செல்லும் அனைவருக்கும் லைஃப் ஜாக்கெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக நேற்று (புதன்கிழமை) நடந்த படகு விபத்தில் இருந்து உயிர்பிழைத்தவர்கள் விபத்துக்குள்ளான படகில் போதிய உயிர் காக்கும் உபகரணம் இல்லை என்று தெரிவித்திருந்தனர். என்றாலும், பெரும்பாலான மக்களுக்கு லைஃப் ஜாக்கெட்டை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரியாது என்றும், அவசர காலங்களில் அவைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு அதிகாரிகள் சொல்லித்தர வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்.